துரைமுருகனுக்கு அடுத்து யார்? உதயநிதியை சுற்றி புதிய பதவி பேச்சு.. அறிவாலயத்தில் பரபரப்பு!
இதற்கு இணையாக உதயநிதி ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற அழுத்தமும் தீவிரமடைந்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அடைந்த தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகள் அமலாக்கப்படும் கட்டத்தை நோக்கி நகர்கிறது. தங்கம் தென்னரசு தலைமையில் அமைக்கப்பட்ட இந்த 10 உறுப்பினர் குழு ஏற்கனவே தனது அறிக்கையை ஆகஸ்ட் முதல் வாரத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.
இதன் அடிப்படையில் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் விரைவில் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 22ஆம் தேதி செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ஆனால் இந்த மறுசீரமைப்பு முயற்சிகள் கட்சிக்குள் பலத்த உள்மோதல்களைத் தூண்டியுள்ளன.
குறிப்பாக பொதுச்செயலாளர் பதவி, செயல் தலைவர் பொறுப்பு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை உயர்த்தல் ஆகியவற்றில் தலைமைக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டால் அடுத்தவராக யாரை நியமிப்பது என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
இதையும் படிங்க: வைஷ்ணவிக்கு பொறுப்பு வழங்கும் திமுக.. செந்தில் பாலாஜி ஆதரவு ஏன்? பரபரக்கும் பின்னணி!
மூத்த தலைவர்கள் சிலர் தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என முயற்சித்து வரும் நிலையில், தற்போதைய கள சூழலுக்கு ஏற்ப இளைய தலைமுறை அல்லது மாற்று சமூகப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதனால் ஒருமித்த முடிவை எட்டுவதில் மு.க.ஸ்டாலினுக்கு சவால் எழுந்துள்ளது. இதற்கு இணையாக உதயநிதி ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற அழுத்தமும் தீவிரமடைந்துள்ளது.
இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவு வட்டாரங்கள் இதற்கு கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர். கட்சியின் கட்டமைப்பை இளைய தலைமுறையை நோக்கி நகர்த்தும் விதமாக இந்த நியமனம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட உள்ளன.
70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாது என்ற புதிய விதியை அமல்படுத்தவும், பதவி இழக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு மாற்று பொறுப்புகள் வழங்கவும் தலைமை திட்டமிட்டுள்ளது. ஆனால் மூத்த தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. “கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினே முழு வீச்சுடன் செயல்பட்டு வரும்போது செயல் தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்கி கூடுதல் அதிகாரம் வழங்குவது தேவையில்லை” என அவர்கள் வாதிடுகின்றனர்.
நிர்வாக வசதிக்காகவும் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் மாவட்டக் கழகங்களை தற்போதைய 78-லிருந்து 100-க்கும் மேலாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் குறைவான தொகுதிகளை கவனித்து திறம்பட செயல்பட முடியும். ஆனால் தங்கள் செல்வாக்கையும் எல்லைகளையும் இழக்க விரும்பாத தற்போதைய மூத்த மாவட்டச் செயலாளர்கள் இந்த முடிவுக்கு கடுமையான முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றனர்.
அடிமட்ட அளவில் ஒன்றிய மற்றும் வார்டு செயலாளர்களையும் மாற்ற வேண்டும் என்ற பரிந்துரைகளும் எழுந்துள்ளன. ஆனால் ஒட்டுமொத்த மாற்றங்களால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் ஆளுங்கட்சி அல்லது தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு தாவிவிடுவார்களோ என்ற அச்சம் தலைமையைப் பிடித்துள்ளது.
ஏற்கனவே சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தவெகவின் எழுச்சியால் பின்னடைவைச் சந்தித்த திமுக, உட்கட்சி மோதல்களையும் நிர்வாகிகள் வெளியேற்றத்தையும் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பு வெற்றிகரமாக அமலாக்கப்பட்டால் கட்சி புத்துயிர் பெறும்; இல்லையெனில் உள்மோதல்கள் மேலும் தீவிரமடையும் வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: இதுதான் நட்பா..?? சட்டசபையிலேயே எதிரிகளுடன் நெருக்கம் காட்டும் திமுகவினர்! கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்!