×
 

திமுகவில் நீக்கப்பட்ட 150 பேருக்கு மீண்டும் வாய்ப்பு! மு.க.ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு! புதிய அரசியல் நகர்வு!

சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களை, மீண்டும் தி.மு.க., வில் சேர்க்க, கட்சியின் தலைவர் ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில் தி.மு.க., பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த காலங்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளை மீண்டும் இணைப்பது குறித்து தி.மு.க., தலைமை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி, தி.மு.க., தலைமை பல்வேறு கட்டங்களில் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக சர்ச்சைக்குரிய பேச்சுகளை வெளியிட்ட சில பேச்சாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

மேலும், மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய மற்றும் ஊராட்சி அளவிலான சில நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கட்சி விதிமுறைகளை மீறியது, தலைமையின் அறிவுறுத்தல்களை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் சிலர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: மிரட்டல் நடந்ததா..? குதிரை பேர வழக்கு... தீவிர விசாரணை..! செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

சென்னை மேற்கு மாவட்டத்தில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் காரணமாக, ஆயிரம் விளக்கு தொகுதியை சேர்ந்த சில இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பெண் கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் சிலர் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான சுமார் 150 பேர் மீண்டும் கட்சியில் சேர அனுமதி கோரி, தலைமையிடம் மன்னிப்பு கடிதம் அளித்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் கட்சியை விட்டு விலகாமல் தொடர்ந்து தி.மு.க., ஆதரவாளர்களாக செயல்பட்டு வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் இணைத்தால், தேர்தல் பணிகளில் அவர்களின் அனுபவமும் உள்ளூர் செல்வாக்கும் பயன்படும் என சில மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கடிதம் பெற்று, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து சாதகமான முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் நேரத்தில் கட்சிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தவும், உள்ளூர் அளவில் அமைப்பை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என தி.மு.க., வட்டாரங்கள் கருதுகின்றன. அதே நேரத்தில், கடந்த காலங்களில் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது கட்சிக்குள் எவ்வாறு எதிரொலிக்கும் என்பதும் அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனிமொழி.. டெல்லி நிலைமை தான் தமிழ்நாட்டிலும்... ஆவேசம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share