இனி ஒன்னும் தேறாது!! பழைய பணிக்கே திரும்பினர் திமுக அமைச்சர்களின் உதவியாளர்கள்!!
தி.மு.க., அமைச்சர்களிடம் அரசு உதவியாளர்களாக பணிபுரிந்தவர்கள், சொந்த துறைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்து த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், தி.மு.க., ஆட்சியின் கடைசி நாட்களில் முக்கிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களிடம் அரசு உதவியாளர்களாக பணியாற்றிய அதிகாரிகள் அனைவரும் தங்கள் சொந்தத் துறைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நிதி, வேளாண்மை, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட மொத்தம் 41 துறைகள் செயல்படுகின்றன. தி.மு.க., ஆட்சியில் முதல்வர், துணை முதல்வர் உட்பட 33 அமைச்சர்கள் பதவி வகித்தனர். ஒவ்வொரு அமைச்சரும் இரண்டு அரசு உதவியாளர்கள் மற்றும் இரண்டு அரசியல் உதவியாளர்களை நியமிக்க அனுமதி உண்டு. இதன்படி, சீனியர் மற்றும் ஜூனியர் உதவியாளர்கள் என 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அமைச்சர்களுடன் பணியாற்றி வந்தனர்.
துணை செயலர் உள்ளிட்ட பல்வேறு பதவி நிலைகளில் இருந்த இந்த அதிகாரிகள், அயல்பணி அடிப்படையில் (deputation) அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். தேர்தல் முடிவுகளுக்குப் பின், த.வெ.க., ஆட்சி அமைக்கும் சூழல் உருவானதைத் தொடர்ந்து, இந்த அதிகாரிகளை பொதுத்துறை மூலம் அவர்களின் மூலத் துறைகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழனிசாமியை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் ஆசைப்பட்டாரு!? நாங்க முடியாதுனு சொல்லிட்டோம்!! சி.பி.எம். பகீர்!
எனினும், இவர்களுக்கு இன்னும் புதிய பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை. பல அதிகாரிகள் தங்கள் பழைய துறைகளுக்குச் சென்றுள்ள நிலையில், அடுத்தகட்ட பணி ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கின்றனர்.
தி.மு.க., ஆட்சியின் முடிவுக்கு பின் அரசு இயந்திரம் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களை திருப்பி அனுப்பியிருப்பது இயல்பான நடைமுறை என்றாலும், பணியிட ஒதுக்கீடு தாமதம் அதிகாரிகளிடையே சிறிய அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க., ஆட்சி அமைக்கும் பணிகள் நடைபெறும் நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புதிய அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப தயாராகி வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்பாவுக்கே துரோகம் பண்ணியே! அதான் விஜய் உன்ன கூப்பிடலை! பாமக அன்புமணிக்கு ராமதாஸ் அட்வைஸ்!