திமுகவை ஒன்றும் கிழிக்க முடியாது: விசாரணை முடிந்து வெளியே வந்த ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் ஆவேச பேட்டி!
சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மூன்று மணி நேர விசாரணைக்கு பின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை மறைக்க திசை திருப்புவதாக ஆ ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசின் காவல்துறை அனுப்பிய சம்மனை ஏற்று, சென்னை சைதாப்பேட்டை ஜே-1 காவல் நிலையத்தில் ஆஜரான திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி மற்றும் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் போலீசார் சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, ஆளும் தவெக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வை மூடி மறைக்கவே எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குகள் போடப்படுவதாகக் கடுமையாகச் சாடினார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து முதலமைச்சர் விஜய் விமர்சித்துப் பேசியதைக் கண்டித்து, கடந்த செப்டம்பர் 12 அன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாகப் பேசியதாகவும் கூறி தொடரப்பட்ட வழக்கில்தான் இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முருகராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், ஆ.ராசாவிடம் 120 கேள்விகளும், மா.சுப்பிரமணியனிடம் 70 கேள்விகளும் என மொத்தம் 190 கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணை முடிந்து காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு! ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜர்!
அப்போது பேசிய ஆ.ராசா, "விசாரணை மிகச் சிறப்பாக நடைபெற்றது. வயது என்ன, எத்தனை குழந்தைகள், சொந்த ஊர் எது, அங்கே நிலம் இருக்கிறதா, நீங்கள் பேசியபோது கலவரம் ஏதேனும் வெடித்ததா, மக்கள் புண்பட்டார்களா என்றெல்லாம் கேட்டார்கள். பாதுகாப்பு கொடுத்ததே காவல்துறைதான். நாங்கள் அமைதியாகப் பேசிவிட்டுச் சென்றோம். காவல்துறையினருக்கே எதற்காக எங்களை அழைத்தார்கள் என்ற தெளிவு இல்லை. என் மீது போடப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையை (FIR) இதுவரை எனக்குக் கொடுக்கவில்லை. அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடந்திருந்தால் காவல்துறை எப்படிப் பந்தோபஸ்து கொடுத்தது? திமுகவைப் பற்றி இவர்களுக்கு ஒன்றும் தெரியாது; திமுகவை யாராலும் ஒன்றும் கிழிக்க முடியாது. மாநிலத்தில் சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையையும், தாறுமாறாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்வையும் மூடி மறைப்பதற்காகவே அரசு மக்களைத் திசைதிருப்பும் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக மிரட்டலுக்கு அஞ்சாது..! ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்ல..! சேகர்பாபு ஆவேசம்..!!