×
 
☰

தண்ணீர் தேங்காததற்கு திமுக ஆட்சியே சான்று: தவெக அரசு மீது தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் காட்டம்!

மழை நீர் விரைந்து வடிவதே திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால்களுக்கு சான்று என தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தலைநகர் சென்னையில் பெய்து வரும் தொடர் மழையிலும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் விரைவாக வடிந்து வருவதற்கு முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்புகளே மிகச் சிறந்த சான்று என்று தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக கல்வியாளர்கள் அணி மாநிலச் செயலாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சென்னை கோட்டூர்புரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 128 குடியிருப்புகளுக்கான வளாகத்தில் ரூபாய் 23.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டிய தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில், மக்களுக்குச் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த 128 அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரமாகக் கட்டி முடிக்கப்பட்டு ஏழு மாதங்களுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.

இதையும் படிங்க: நயினாரை கைது செஞ்சீங்களா.? அப்பட்டமான அத்துமீறல்..! நாதக கார்த்திகாவுக்கு குரல் கொடுத்த கனிமொழி எம்.பி..!!

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களால்தான் தற்போது மழை பெய்தாலும் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் விரைந்து வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது என்றும், ஆனால் தற்போதைய புதிய அரசோ மாலையில் ஒன்றை அறிவித்துவிட்டு காலையில் அதனைத் திரும்பப் பெறுவதையே வழக்கமான செயல்பாடாகக் கொண்டுள்ளது என்றும் விமர்சித்தார். 

மேலும், மாநிலத்தில் அண்மையில் ரூபாய் 615 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுதான் இந்த அரசின் சாதனையா என்று கேள்வி எழுப்பிய அவர், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் கார்த்திகாவை இரவு உடையில் வைத்து அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: திமுக முடிக்காத 40% பணி! 4 மாதங்களில் முடித்த தவெக! சென்னை மழைநீர் வடிகால் பணிகள் - செங்கோட்டையன் குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share