×
 

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேசக்கூடாது! முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கக் கர்நாடகம் செல்லவுள்ள முதலமைச்சர் விஜய்யின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், கர்நாடக அரசுடன் தமிழக அரசு எந்தவிதப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். கும்பகோணத்தில் வேளாண் துறை அமைச்சர் வினோத் அளித்த பேட்டியைத் தொடர்ந்து, அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு

வேளாண் அமைச்சரின் கூற்று மற்றும் தவெக அரசின் முடிவு குறித்து பேசிய அன்புமணி இராமதாஸ் கர்நாடகத்தில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் முதலமைச்சர் விஜய் பேசவுள்ளதாக அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை குறித்துப் பேச்சு நடத்தத் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. கர்நாடக அரசு மின்னஞ்சல் வாயிலாக விடுத்த அழைப்பை ஏற்று முதலமைச்சர் அங்கு செல்வது முற்றிலும் தவறான முன்னுதாரணமாகும்.

இதையும் படிங்க: "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

மேகதாது அணை என்பது தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைப் பிரச்சனை அல்ல; அது கர்நாடகாவின் ஒருசார்பான சட்டவிரோதக் கோரிக்கை. பேச்சுவார்த்தைக்குச் சென்றாலே அதை இருதரப்புப் பிரச்சனையாக நாம் ஏற்றுக்கொண்டதாகிவிடும். அதன் பிறகு அணையின் கொள்ளளவு மற்றும் தண்ணீர் திறக்கும் நடைமுறைகள் பற்றித்தான் பேசுவார்களே தவிர, அணையைத் தடுப்பது சாத்தியமில்லாமல் போய்விடும். இது தமிழகத்தின் காவிரி உரிமையை மொத்தமாகத் தாரைவார்ப்பதற்குச் சமம்.

மேகதாது போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல், உழவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். பாமக தொடர்ந்து வலியுறுத்தியும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் அரசு தன்னிச்சையாகச் செயல்படுகிறது.

எனவே, ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேகதாது அணை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தக் கர்நாடகம் செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், நீதிமன்றம் மூலமாகச் சட்டப் போராட்டங்களை நடத்தி மேகதாது அணைத் திட்டத்தை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் கோரியுள்ளார்.

இதையும் படிங்க: மாநில உரிமைகளை தொட்டால் விடமாட்டோம்! புதிய சட்டங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share