போராட்டத்தில் குதித்த பகுதிநேர ஆசிரியர்கள்... DPI வளாகத்தில் பரபரப்பு..!
சென்னை டி பி ஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் முக்கியமாக கலை, இசை, தையல், உடற்கல்வி போன்ற சிறப்புப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களாவர். தமிழகத்தில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களது போராட்டத்தின் மையக் கோரிக்கை பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு ஆகும். இந்தப் போராட்டத்தின் பின்னணி 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதியாகும். திமுகவின் தேர்தல் அறிக்கையின் 181வது உறுதிமொழியில், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாகக் கூறப்பட்டது.
ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல நாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தில் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழிப் போராட்டங்கள் நடைபெற்றன. தினசரி போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைவில் நல்ல செய்தி வரும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ஓய மாட்டோம்... 6வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்... DPI அலுவலகம் முற்றுகை...!
ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.இதேபோல் 2025 டிசம்பர் மாதத்திலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சிகளான பாஜக, அதிமுக உள்ளிட்டவை போராட்டத்தை ஆதரித்து திமுக அரசை விமர்சித்தன. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பி போராடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நாங்க பாவமில்லையா? மயானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள்...!