×
 

5 வருஷமா என்ன செஞ்சீங்க? ஒரு மெகாவாட் கூட உற்பத்தி பண்ணலையா? திமுகவை சாடிய அன்புமணி!

தனியாரிடம் ஒரு யூனிட் ₹9.50 வரை அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாலை நேர மின் தேவையைச் சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை ₹9.50 வரை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது மின் வாரியத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும், இதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான கோடை கால மின் தேவையைப் பூர்த்தி செய்ய 1,553 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்காக ஒரு யூனிட் ₹8.50 முதல் ₹9.50 வரை விலை கொடுத்துத் தனியாரிடம் வாங்க அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், இது மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டும் செயல் எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்று வரை ஒரு மெகாவாட் அளவிற்குக்கூடப் புதிய மின் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தின் மொத்த மின் தேவையில் வெறும் 16% மட்டுமே மின்சார வாரியம் சொந்தமாக உற்பத்தி செய்வதாகவும், மீதமுள்ள 80 சதவீதத்திற்கும் மேலான மின்சாரத்தை மத்தியத் தொகுப்பு மற்றும் தனியாரிடமிருந்தே வாங்குவதாகவும் அவர் புள்ளிவிவரங்களை அடுக்கினார்.

இதையும் படிங்க: ஓய்வூதியத் திட்டம் ஒரு பூசி மெழுகும் வேலை! திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி!!

கடந்த ஆண்டில் மட்டும் 11,179 கோடி யூனிட் மின்சாரம் வெளியே இருந்து வாங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சொந்தமாக மின்னுற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்தாமல் தாமதப்படுத்துவது, தனியாரிடம் அதிக விலைக்கு வாங்குவதற்காகவே எனத் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளில் ₹45,000 கோடி அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தியும் மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதற்குக் காரணம் இதுபோன்ற அதிக விலை கொள்முதல்களே ஆகும். எனவே, சந்தை சராசரி விலையைக் கணக்கிட்டு, அதைவிடக் குறைந்த விலையிலேயே மின்சாரத்தை வாங்க ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும், திமுக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 2026 தேர்தல் களம்! ஜனவரி 20-ல் திமுக மாசெக்கள் கூட்டம்.. துரைமுருகன் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share