பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி தேர்வு! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் வேகம் எடுத்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழு நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார். தருமபுரி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ள முனைவர் சௌமியா அன்புமணி பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சட்டமன்ற முதன்மைச் செயலாளர் முனைவர் கே. சீனிவாசனுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செஞ்சி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ள முனைவர் அ. கணேஷ்குமார் சட்டமன்றக் குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றுவார். விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ச. சிவக்குமார் பா.ம.க-வின் சட்டமன்றக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க..! சௌமியா அன்புமணி ஆதரித்து அண்ணாமலை பரப்புரை..!!
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய முகமாகவும், தருமபுரி மக்களின் பிரதிநிதியாகவும் சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள முனைவர் சௌமியா அன்புமணி, இப்போது அக்கட்சியின் சட்டமன்றத் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைமையிலான புதிய ஆட்சியில், பா.ம.க-வின் குரலைச் சட்டமன்றத்தில் வலுவாக எதிரொலிக்க இந்த இளைய மற்றும் கல்வித் தகுதி மிக்க தலைமை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்! 85.15% வாக்குப்பதிவு குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!