ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!
ஓமன் அருகே ட்ரோன் தாக்குதலால் இந்திய சரக்கு கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: ஓமன் அருகே ட்ரோன் தாக்குதலில் இந்திய சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ‘ஹாஜி அலி’ என்ற சரக்குக் கப்பல் நேற்று அதிகாலை ஓமனின் வடக்கு கடற்கரையில் உள்ள லிமா பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தது. சோமாலியாவில் இருந்து ஷார்ஜா நோக்கி கால்நடைகளை ஏற்றிச் சென்ற இந்தக் கப்பல், அடையாளம் தெரியாத ட்ரோன் அல்லது ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. தாக்குதலில் கப்பலில் தீ பற்றியதால் கட்டுப்பாட்டை இழந்த கப்பல் கடலில் மூழ்கியது.
கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகள் ஓமன் அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகக் கப்பல் உரிமையாளர் சுல்தான் அகமது தெரிவித்தார். தாக்குதலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இதையும் படிங்க: மேற்காசிய போரை நிறுத்த 14 அம்ச ஒப்பந்தம்!! அமெரிக்கா - ஈரான் விரைவில் கையெழுத்திட வாய்ப்பு!
வெளியுறவு அமைச்சகம் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “வணிகக் கப்பல்கள் மற்றும் சிவிலியன் மாலுமிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இப்பகுதியில் கடல் பாதுகாப்பு மிகவும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.
இந்நிலையில், போர் பதற்றத்துக்கு மத்தியிலும் இந்தியாவுக்கு எரிவாயு கொண்டு வரும் இரு எல்.பி.ஜி. டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்துள்ளன. ‘சிமி’ என்ற கப்பல் 19,965 டன் எல்.பி.ஜியுடன் காண்ட்லா துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டுள்ளது. ‘என்.வி. ஷைன்’ என்ற மற்றொரு கப்பல் 46,427 டன் எல்.பி.ஜியுடன் நியூ மங்களூரை வந்தடைய உள்ளது. இரு கப்பல்களிலும் உள்ள சரக்குகள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமானவை.
இதனிடையே, ஐக்கிய அரபு எமிரேட்சின் கிழக்கு கடற்கரையில் ஒரு கப்பல் ஆயுதமேந்திய நபர்களால் கைப்பற்றப்பட்டு ஈரான் நோக்கி இழுத்துச் செல்லப்படுவதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் கடல் கொள்ளையும், கப்பல் சிறைப்பிடிப்பும் அதிகரித்து வருவது சர்வதேச வர்த்தகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
மத்திய அரசு இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!