#BREAKING விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை... நாளை அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு...!
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல் , நேற்று 1730 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று காலை நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் - வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு - தென்கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அப்பொழுது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது.
இது, சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும், வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தொடரும் என்பதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது, அண்ணா பல்கலைக்கழ்கம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர பிற மாவட்டங்களில் தேர்வுகள் நடைபெறும் என்றும், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.