×
 

திண்டுக்கல் டூ கன்னியாகுமரி வரை.. தமிழகத்தில் இங்கெல்லாம் சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

தமிழகம் முழுவதும் பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே அதிரடி கிளப்பியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றால அருவி: 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் இதுவரை இல்லாத அளவு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி இரண்டு நாட்களாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க: அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே! 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... !

இந்நிலையில் இன்று மாலை மலைப்பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. இதைத் தொடர்ந்து குற்றால அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது செம்மண் கலந்த தண்ணீர் ஆக்ரோஷமாக விழுந்து கொண்டிருக்கிறது அருவியின் முன்புள்ள பாலத்தை தாண்டி தண்ணீர் விழுந்து கொண்டிருப்பதால் அருவி கரைக்குச் செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை ஏமாற்றில் ஆழ்த்தியுள்ளது. 

சுருளி அருவி: 

தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் சுருளி அருவி  உள்ளது. நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்தது. இதனால் அருவிக்கு வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் இன்று தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவியில் குளிப்பதற்கான தடை நீடிக்கும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

ஜவ்வாது அருவி: 

 ஜவ்வாதுமலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக  பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கம், ஜமுனாமரத்தூர், போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக  பரவலாக மழை பெய்து வரும் நிலையில்  ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள ஜமுனாமரத்தூர், அத்திப்பட்டு, கோவிலூர், நம்மியாம்பட்டு, பட்டறைகாடு, ஊர்கவுண்டனூர், ஆண்டியப்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது 

இயற்கை எழிலும் அடர்ந்த வனப்பகுதியும் கொண்ட ஜவ்வாதுமலை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் கன மழை பெய்து வருவதாலும், பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி, வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகள் பீமன் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேகமலை அருவி: 

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை. வெள்ளிமலை உள்ளிட்ட மலைபகுதிகளில் இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் மேகமலை அருவியில் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

அருவியில் உள்ள பாதுகாப்பு தடுப்பு கம்பிகளை சேதப்படுத்தி படிக்கட்டுகள் வழியே தண்ணீர் சீறிப்பாய்வதால், ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே சோதனை சாவடி அமைத்து வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணி சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கும் , அருவி பகுதிக்கு செல்வதற்கும் தொடர்ந்து இரண்டாவது நாளாக தடை விதித்துள்ளனர். 

திற்பரப்பு அருவி: 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மதியம் துவங்கிய மழை இன்று அதிகாலை நீடித்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் இந்த சூழ்நிலையில் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் ‘குமரியின் குற்றாலம்’ என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி 3 பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு ஒரு பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

பேரூராட்சி ஊழியர்கள் சுற்றுலாப் பயணிகளை கண்காணித்து வருகின்றனர். தொடரும் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: கரூர் ஆறாத வடுக்கள்... தவெகவினர் தீபாவளி கொண்டாட வேண்டாம்... கட்சி தலைமை அறிவுறுத்தல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share