“டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?
இதனால் பல வீடுகளில் 20-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள், 10-க்கும் மேற்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் சேதமடைந்துள்ளன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஏற்பட்ட உயரழுத்த மின்சார விநியோகக் கோளாறு காரணமாக, ஏராளமான வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம், இறைச்சி மஸ்தான் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டபோது, உயரழுத்த மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல வீடுகளில் 20-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள், 10-க்கும் மேற்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் சேதமடைந்துள்ளன.
இதையும் படிங்க: மீண்டும் வெடித்தது போர்... ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில்:
“நாங்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென விசிறி வேகமாகச் சுழலத் தொடங்கியது. சில நொடிகளில் தொலைக்காட்சியில் இருந்து புகை வெளியேறியது. பின்னர் வெடிப்பது போன்ற சத்தமும் கேட்டது. உடனடியாக மின் இணைப்பை துண்டித்துவிட்டோம். அதன் பிறகு எந்த மின் சாதனத்தையும் பயன்படுத்தவில்லை,” என்றார்.
உயரழுத்த மின்சாரம் காரணமாக மின்அடுப்புகள், மின் இணைப்புகளில் சார்ஜ் செய்யப்பட்டு கொண்டிருந்த செல்போன்கள், விசிறிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் என ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்றொரு குடியிருப்பாளர் கூறுகையில்:
“இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென மின்னழுத்தம் அதிகரித்ததால், சுமார் 40 முதல் 50 வீடுகள் வரை பாதிக்கப்பட்டன. தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, விசிறி, செட்-டாப் பாக்ஸ், மின்அடுப்பு உள்ளிட்ட பல பொருட்கள் சேதமடைந்தன,” என்றார்.
மேலும் மற்றொருவர் கூறுகையில்:
“இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல வீடுகளில் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் திடீரென பழுதடைந்துள்ளன. புதிதாக வாங்கிய பொருட்கள்கூட வெடித்து சேதமடைந்துள்ளன. இந்த இழப்புகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்தார்.
மின்வாரியத்தின் அலட்சியமே இந்த சம்பவத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சேதமடைந்த மின் சாதனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கூட்டணித் தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!