மக்களே..!! வால்பாறைக்கு போறீங்களா..!! இத நோட் பண்ணிக்கோங்க..!!
வரும் நவம்பர் 1ம் தேதி முதல் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாவட்டத்தின் அழகிய சுற்றுலா தலமான வால்பாறைக்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்படுகிறது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் இந்நடைமுறை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார். இது சுற்றுலாப் பயணிகளின் அளவைக் கட்டுப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை தடுக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ள வால்பாறை, தேயிலைத் தோட்டங்கள், அருவிகள், வனவிலங்குகள் என பல்வேறு இயற்கை அழகுகளைக் கொண்டுள்ளது. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி வழியாகத் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல், சாலை அரிப்பு, கழிவு மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
இதையும் படிங்க: குற்றாலத்தில் சீரான நீர்வரத்து.. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மற்ற மலைநிலங்களில் இ-பாஸ் அமைப்பு வெற்றிகரமாக உள்ளது. இதைப் பின்பற்றி வால்பாறைக்கும் இது அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, IIT-மெட்ராஸ் மற்றும் IIM-பெங்களூரு நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து, வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளைத் தரவு சேகரிக்க இ-பாஸ் அமைப்பை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், நவம்பர் 1 முதல் வால்பாறைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயம்.
https://epass.tnega.org என்ற இணைய தளம் மூலம் இ-பாஸ் பெறும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள், ஆழியார் வனத்துறை சோதனை சாவடியிலும், சோலையார் அணை இடதுகரை சோதனை சாவடியிலும் இ-பாஸ் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் தங்கள் வாகன விவரங்கள், பயணத் தேதி, தங்குமிடம் போன்றவற்றைப் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு ஈ-பாஸ் பெறலாம்.
வால்பாறை தாலுகா குடியிருப்பாளர்கள் "லோக்கல்" பாஸ் என வகைப்படுத்தி ஒரே நேரத்தில் பதிவு செய்து, டூ-வீலர், ஃபோர்-வீலர், டூரிஸ்ட் வாகனங்களுக்கு பாஸ் பெறலாம். தினசரி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும் எனவும், இது போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நடைமுறை குறித்து சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. "இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நல்ல முயற்சி. ஆனால், ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறை எளிதாக இருக்க வேண்டும்," என கூறுகின்றனர்.
வனத்துறை, போக்குவரத்துத் துறை, உள்ளூர் உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, வால்பாறையின் இயற்கை அழகைக் காக்கும் அதே வேளையில், பயணிகளின் வசதியையும் கருத்தில் கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: குற்றாலத்தில் சீரான நீர்வரத்து.. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!