×
 

ஷாக் அடிக்க போகுதா மின் கட்டணம்.? ஜூலை முதல் கட்டணம் உயர்வு..? திமுக அரசை வறுத்தெடுக்கும் ராமதாஸ்.!!

ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்க்கையின் சுமைகளையும், வரிச்சுமைகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.



தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது தொடர்பாக அப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் 3.16 விழுக்காடு எனத் தெரியவந்திருப்பதால், அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்வதற்காகத்தான் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு மாயைதான். மின்கட்டணம் உயர்த்தப்படாததால்தான் மின்சார வாரியம் இழப்பை எதிர்கொண்டு வருகிறது என்பதோ, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் மின்வாரியம் லாபத்தில் இயங்கும் என்பதோ உண்மையல்ல. இதை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வரவு செலவு கணக்கு குறித்த புள்ளி விவரங்களே உறுதி செய்கின்றன.



2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண உயர்வின் மூலம் அந்த ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆண்டு முழுவதற்கும் கணக்கிட்டால் ரூ.31,500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்திருக்கக்கூடும்.
அதற்கு முன் மின்வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்துக்கு குறைந்தது ரூ.14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் ரூ. 10,000 கோடியாக அதிகரித்தது.

இதையும் படிங்க: பாஜக உத்திக்கு இண்டியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. அப்பா ப.சிதம்பரம் வழியில் மகன் கார்த்தி சிதம்பரம்!

2023ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 2023-24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் 4.83% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிலும் மின்சார வாரியம் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.


மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதுதான். அதற்கு முடிவு கட்டி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம்தான் மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். எனவே, ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மாறாக, மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்" என்று அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க: பாமகவில் ஓங்கும் அன்புமணியின் கை..! கழட்டி விடப்படுகிறாரா ராமதாஸ்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share