×
 

தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!! காரணம் என்ன..??

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் தொடர்பாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய 18 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான 2017-ம் ஆண்டு தேர்வு நடைமுறையில் ஏற்பட்ட பரபரப்பு ஊழல் விவகாரம் மீண்டும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆண்டு 1,058 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) எழுத்துத் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டது. ஆனால், இந்தத் தேர்வில் பதில் தாள்கள் மாற்றியமைக்கப்பட்டது, மதிப்பெண்கள் பெருமளவில் உயர்த்தப்பட்டது உள்ளிட்ட குளறுபடிகள் நடைபெற்றதாக பல்வேறு தரப்புகளிலிருந்து கடும் புகார்கள் எழுந்தன.

புகார்களின் அடிப்படையில் TRB உறுப்பினர் செயலாளர் உமா, சென்னை காவல் ஆணையரிடம் நேரடியாக முறையிட்டார். இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு (CBCID) போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் 156 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. தேர்வில் இடைத்தரகர்களாகச் செயல்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு வேலைக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. மொத்தம் 50 கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஊழல் தகுதியான ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாதித்தது. பலர் தங்கள் உழைப்பு வீணானதாக உணர்ந்து மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

இதையும் படிங்க: ஆசிரியர்களின் கவனத்திற்கு..!! TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு..!!

இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இன்று காலை முதல் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 18 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் திருமங்கலம் 5-வது தெரு எச் பிளாக்கில் வசிக்கும் செந்தில் குமார் இல்லம் உள்ளிட்ட பல இடங்களில் ED அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

பெரவள்ளூர், அண்ணா நகர் போன்ற பகுதிகளிலும் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் இடங்களில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. இந்தச் சோதனைகள் மூலம் ஊழலில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் தொடர்புகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முறைகேடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு நடைமுறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

மேலும் பல ஆண்டுகளுக்கு முந்தைய இந்த வழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கான தேர்வு முறையில் முழுமையான சீர்திருத்தம் தேவை என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. 
 

இதையும் படிங்க: பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share