#BREAKING: மருந்து கொள்முதலில் முறைகேடா? வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!
வேலூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற தனியார் மருத்துவக் கல்லூரியான சிஎம்சி மற்றும் அதன் விடுதிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மருந்துகள் கொள்முதல் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7-க்கும் மேற்பட்டோர், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை வளாகம் மட்டுமின்றி, தோட்டப்பாளையத்தில் உள்ள மருத்துவர்கள் தங்கும் விடுதியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மருத்துவமனையின் நிர்வாக அலுவலகங்களில் வரவு-செலவு கணக்குகள் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, மருந்து பொருட்கள் மற்றும் உயர்தர மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி மற்றும் பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களும் அமலாக்கத்துறையின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நாளை வேலூர் வருகிறார் திரவுபதி முர்மு..!! பாதுகாப்பிற்காக 1,200 போலீசார் குவிப்பு..!!
மருத்துவர்கள் தங்கும் விடுதியில் நடைபெறும் சோதனையின் போது, அங்கிருந்த சில முக்கிய கோப்புகள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய மருத்துவ நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கொள்முதல் நடைமுறைகள் மீது மத்திய அமைப்புகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், இன்றைய சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனினும், இந்தச் சோதனை குறித்து மருத்துவமனை நிர்வாகமோ அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகளோ இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கத்தைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் தணிக்கை வாரியம்; மத்திய அரசை சாடும் முதலமைச்சர் ஸ்டாலின்!