×
 
☰

மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

மின்சார கொள்முதல் தொடர்பான விவகாரத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எதிர்பாராத விதமாக ஐந்து மாதங்களுக்கு முன் அமைந்த தவெக கூட்டணி அரசு, தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றிலேயே இல்லாத வகையில் யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 35 ரூபாய் என்ற மிக அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தச் செய்தி அதிர்ச்சியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மின்சார வாரியம் கடன் சுமையால் தள்ளாடுவதாகவும், முந்தைய ஆட்சியில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி மின் கணக்கீட்டில் மாறுதல் செய்கிறோம் என்று அறிவித்த நிலையிலும், ஏற்கனவே ரூ.1500 மின் கட்டணம் செலுத்தி வந்த தமிழக மக்கள் தற்போது சுமார் ரூ.4,000 வரை கட்டுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன என்று எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். இத்தகைய சூழலில் அதிக விலையில் மின் கொள்முதல் செய்ய போடப்பட்ட இந்த ஒப்பந்தம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேலும் கடன் சுமையில் மூழ்கடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேர்தலுக்கு முன் தனது சொகுசுப் பேருந்தில் மேல்புறத்தில் இருந்து வசனம் பேசிய நடிகர் விஜய், மின்சார வாரியத்தைப் பற்றி பேசும்போது ‘டெண்டர்’ என்ற வார்த்தையை மிக அழகாக, தொண்டை நரம்பு தெறிக்குமளவிற்கு ஏற்ற இறக்கத்துடன் பேசி கைதட்டலை பெற்றதை நினைவுகூர்ந்தார். ஆட்சியை அமைத்த திரு. ஜோசப் விஜய், மின் பற்றாக்குறை அவசர நிலையைப் பயன்படுத்தி, ஏற்கனவே யூனிட் ஒன்றிற்கு ரூ.11 முதல் 20 வரை கொள்முதல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சராசரி யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை அதிக விலைக்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

இதில் மிகப் பெரிய மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுவதாகவும், தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ‘வெற்றி மெகா வசூல் திட்டத்தை’ தொடங்கிவிட்டதாக மக்கள் பரவலாகப் பேசுவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.ஏற்கனவே பல லட்சம் கோடி கடனில் மிதக்கும் தமிழக மின்சார வாரியத்தை மேலும் கடனில் மூழ்கடித்து, கடைசியில் தனியாருக்கு தாரை வார்க்க இந்த அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அநியாய விலைக்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், இந்த ஒப்பந்தத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. சந்திக்கப்போகும் இபிஎஸ்..!! அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறும் மீட்டிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share