×
 

ஆய்வுக் கூட்டங்களை நடத்தும் ஸ்டாலினுக்கு இது தெரியாதா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!!

கடலூர் ரயில் விபத்து விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரணத்தோடு விளக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் ரயில் விபத்துக்கு முழுக்க மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், தென்னக ரயில்வே இன்று வெளியிட்ட செய்தியில் இன்னொரு முக்கியமான விவகாரத்தை சுட்டிக்காட்டி உள்ளது. அதாவது இந்த விபத்து நடந்த இடத்தில் அண்டர் பாஸ் எனப்படும் சுரங்கப்பாதை அமைப்பதற்கு தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்து அதற்கான முழு நிதியையும் தானே தருவதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டது.

ஆனால், கடலூர் மாவட்ட கலெக்டர் கடந்த ஒரு வருடமாக இத்திட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்று தென்னக ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் எம்.செந்தமிழ்செல்வன் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார். அதன்படி பார்த்தால் இந்த கொடூரத்திற்கு முழுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என்றாகிறது. உங்களுடன் ஸ்டாலின், எங்களுடன் ஸ்டாலின் என்றெல்லாம் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக இந்த சுரங்கப்பாதைக்கு மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளிக்காதது தெரியாதா?

இதையும் படிங்க: கடலூர் ரயில் விபத்து; குழந்தைகள் உயிரிழப்புக்கு இதுவே முதன்மை காரணம்... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!

இந்த ஒரு வருடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு எத்தனை முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வந்திருக்கிறார்?  கடலூர் மாவட்ட அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன் ஆகியோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கடலூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மாவட்ட கலெக்டர் அனுமதி கொடுத்திருந்தால், அந்த இடத்தில் சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்கும்.

பச்சிளம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். மாவட்டம் நிர்வாகத்தை முடுக்கி விட வேண்டிய, இந்த கொடூரம் நடந்த பகுதியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் என்ன செய்து கொண்டிருந்தார்? எல்லா வகையிலும் கடமை தவறி விட்டது இந்த அரசு. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தி என்ன நடந்தது என்பதை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் காரணத்தோடு விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாநிலம் காக்க மாபெரும் பயணம்; இந்த போர்க்களத்தில் சிப்பாயாக இருப்பேன்... இறங்கி அடிக்கும் ஈபிஎஸ்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share