சிக்ஸர்களாக விளாசும் எடப்பாடியார்..! ஒரே வரியில் அவுட் ஆக்கிய ஜெ-வின் உதவியாளர்..!
என் உயிர் உள்ளவரை என் வாக்கும் இரட்டை இலைக்குத்தான். அதே நேரத்தில் கட்சிக்கு நான் சொல்ல வேண்டிய கருத்துக்களை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பேன்.
ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய உதவியாளர்களில் முக்கியமானவராக இருந்தவர் ஜெ.பூங்குன்றன். ஜெயலலிதாவின் அரசியல், தனிப்பட்ட விவகாரங்களை அருகில் இருந்து கவனித்தவர். ஜெயலலிதாவுடனான தனது பணி, அவரது மரணத்திற்குப் பிந்தைய சூழல்கள் குறித்து சமூக ஊடகங்களில் காரசாரமாக பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், ''பழனி வாழ் சாமியின் அருளோசியோடு எடப்பாடியார் வாழ்க பல்லாண்டு..! முதலமைச்சர் பதவி அவரிடம் வந்த போது, நான் நண்பர்களிடம் சொல்வேன்.. அம்மா அவர்களின் ஆசி அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது என்று..! காரணம் யாருக்கு பிரச்சனை வந்தாலும் அவருக்கு வரவில்லை. மேலும் பலர் முன்னிலையில் இருக்கும் போது அவரை தேடி இந்த வாய்ப்பு வந்தது. அம்மாவின் கடைசி காலத்தில் இவர்தான் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
இதையும் படிங்க: 71 வயதினிலே... எடப்பாடி முன்பிருக்கும் 5 அரசியல் சவால்கள்...!
ஆட்சியை நடத்த முடியுமா? நடத்திக் காட்டினார். நல்ல பெயர் எடுக்க முடியுமா? எடுத்துக்காட்டினார். தேசிய கட்சியை எதிர்க்க முடியுமா? எதிர்த்துக்காட்டினார். தேசிய கட்சியில் விரும்பிய ஒருவரை தலைவராக்க முடியுமா? நிகழ்த்திக் காட்டினார். கூட்டணிக்கு இவர்தான் தலைவர் என்று சொல்லவைக்க முடியுமா? செய்து காட்டினார். தேசிய கட்சியின் தலைவரை மாற்றமுடியுமா? மாற்றிக் காட்டினார்.
தன்னை எதிர்த்தவரை உறவாக்கிக் கொள்ளமுடியுமா? பங்காளி என்று உறவாடச் செய்தார். எதிர்ப்பவர்களை பணிய வைக்க முடியுமா? சமரசம் பேச வைத்தார். தன்னை உடனிருப்பவர்களால் எதிர்க்கமுடியுமா? பேசக்கூட முடியாது என்று புரிய வைத்தார். இப்படி போட்ட பாலில் எல்லாம் சிக்சர் அடித்துக் கொண்டிருக்கும் எடப்பாடியார் வாழ்க பல்லாண்டு.
'தன்னை நம்பிக்கையானவர்கள் சூழ்ந்துள்ளார்களா?' என புரியாத போதிலும் நம்பிக்கையோடு வழி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் வாழ்க பல்லாண்டு..! என்னடா.. ஏகத்துக்கும் பாராட்டுகிறார் என்று நினைக்காதீர்கள். உண்மையை சொன்னேன். என் ஆதரவு இரட்டை இலைக்கும், இதய தெய்வங்கள் வளர்த்த இந்த கட்சிக்கும் தான். என் உயிர் உள்ளவரை என் வாக்கும் இரட்டை இலைக்குத்தான். அதே நேரத்தில் கட்சிக்கு நான் சொல்ல வேண்டிய கருத்துக்களை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பேன்.
2026ல் கட்சியை ஆட்சியில் அமர்த்த தாங்கள் நல்ல உடல் நலத்தோடும், மன நலத்தோடும் வாழ என் அப்பன் பழனி ஆண்டியை மனமுருக வேண்டுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வருபவர் ஜெ.பூங்குன்றன். இந்நிலையில் ''தன்னை நம்பிக்கையானவர்கள் சூழ்ந்துள்ளார்களா?' என புரியாத போதிலும் நம்பிக்கையோடு வழி நடத்திக் கொண்டு இருக்கிறார்'' என பூங்குன்றன் தெரிவித்துள்ளது எடப்பாடி பழனிசாமியை வஞ்சப்புகழ்ச்சியாகவே பார்க்கப்பபடுகிறது.
இதையும் படிங்க: 'இபிஎஸ் பிறந்தநாளுக்காக இந்தியா - பாக்., போரையே தள்ளி வைச்சிட்டாங்க..! வைகை செல்வன் அக்கப்போர்..!