சட்டப்படிப்புகளுக்கான CLAT நுழைவுத் தேர்வு.. விண்ணப்பம் தொடக்கம்..!!
சட்டப்படிப்புகளுக்கான கிளாட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கியது.
காமன் லா அட்மிஷன் டெஸ்ட் (CLAT) எனப்படும் கிளாட் நுழைவுத் தேர்வு, இந்தியாவில் உள்ள 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் (NLUs) இளநிலை (LLB) மற்றும் முதுநிலை (LLM) சட்டப்படிப்புகளில் சேருவதற்கான தேசிய அளவிலான முக்கிய தேர்வாகும். இந்தத் தேர்வு, கான்சார்ட்டியம் ஆஃப் நேஷனல் லா யூனிவர்சிட்டீஸ் (Consortium of NLUs) மூலம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் 2026ம் ஆண்டு நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்தத் தேர்வு, டிசம்பர் 7ம் தேதி அன்று மதியம் 2 முதல் 4 மணி வரை ஆஃப்லைன் முறையில் நடைபெறும் என்று கிளாட் கூட்டமைப்பு (Consortium of NLUs) அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: எப்பவுமே வயசு தடை இல்லைங்க... எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்த மூத்த குடிமக்கள்!
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், கிளாட் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான consortiumofnlus.ac.in இல் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பப் பதிவு அக்டோபர் 31ம் தேதி வரை திறந்திருக்கும். பொதுப் பிரிவு மற்றும் OBC/PWD/NRI/PIO/OCI வகைகளைச் சேர்ந்தவர்கள் 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களும், SC/ST வகைகளைச் சேர்ந்தவர்கள் 40% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் படிப்புகளுக்கு, LLB பட்டத்தில் 50% மதிப்பெண்கள் தேவை (SC/ST-க்கு 45%). வயது வரம்பு இல்லை.
விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.4,000, SC/ST மற்றும் BPL வகையினருக்கு ரூ.3,500 ஆகும். விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வி விவரங்கள், புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
கிளாட் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, சட்டத் திறனறிவு, தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் கணிதம் ஆகியவற்றிலிருந்து 120 பல்தேர்வு கேள்விகள் இடம்பெறும். தேர்வு முடிவுகள் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாட் தேர்வு மூலம் 3,213 இளநிலை இடங்களும் 1,217 முதுநிலை இடங்களும் நிரப்பப்படுகின்றன. 60-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளும் கிளாட் மதிப்பெண்களை ஏற்கின்றன. இந்தத் தேர்வு, ONGC, BHEL போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கும் உதவுகிறது.
மாணவர்கள், தேர்வுக்கு தயாராக, முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகளைப் பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் தேர்வு, சட்டத் துறையில் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க விரும்புவோருக்கு முக்கிய வாய்ப்பாகும்.
இதையும் படிங்க: இதோ வந்துட்டான்ல…”ரெட் அலர்ட்”... எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?