"NO SPECIAL CLASS"..! காலாண்டு விடுமுறை சிறப்பு வகுப்புகள் கூடாது.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!!
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 2025-26 ஆம் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. முதலாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, அக்டோபர் 6ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.
இந்த விடுமுறைக் காலத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி போன்ற பண்டிகைகளும் அடங்கியிருந்ததால் குடும்பங்களுடன் சுற்றுலா செல்லவும், உறவினர்களைச் சந்திக்கவும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில் சில தனியார் பள்ளிகள், குறிப்பாக பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் நோக்கில் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டிருந்தன. சில பள்ளிகள் அக்டோபர் 3ஆம் தேதியே பள்ளிகளைத் திறப்பதாகவும் அறிவித்திருந்தன.
இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. விடுமுறை என்பது மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறும் காலம் என்பதால், கூடுதல் பாடச் சுமை அவர்களின் மனநலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து வலுவடைந்தது.இந்தப் பின்னணியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உடனடியாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் காலாண்டு விடுமுறை நாட்களில் எந்தவிதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. இந்த உத்தரவு சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. நீதிமன்றம் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் போதுமான ஓய்வும் மன அழுத்தமின்மையும் அவசியம் என வலியுறுத்தி, சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்குத் தடை விதித்திருந்தது.
இதையும் படிங்க: #BREAKING: விறுவிறு இடைத்தேர்தல்...! விஜய்க்கே ஆதரவு...! தவெக கூட்டணிக்கு த.மா.கா. பேராதரவு..!!
விடுமுறைக் காலத்தில் மாணவர்களைக் கட்டாயப்படுத்திப் பள்ளிக்கு வரவழைப்பது அவர்களின் உரிமையைப் பாதிக்கும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில், இந்த உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட தண்டனைகளும் இதில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து வரும் புகார்களை உடனடியாக விசாரித்து, தவறு செய்யும் பள்ளிகளை அடையாளம் காணுமாறு உத்தரவிடப்பட்டது. மாணவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், கல்வி முறையில் சமநிலையை உறுதி செய்வதே நோக்கம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: பள்ளி காலை உணவில் பல்லி..! வாந்தி, மயக்கம்..! 36 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!