பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம்
பீகாரைச் சேர்ந்தவர்களை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக வெளியான செய்தி, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் ஒரு பகுதி. இதன்மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் சுமார் 70 லட்சம் வெளிமாநிலத்தவர்கள் வாக்காளர்களாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது தமிழர்களின் இன உரிமைகளை மறுப்பதாகவும், தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும், பாஜக இதன்மூலம் தமிழ்நாட்டை பீகார் அல்லது மத்தியப் பிரதேசமாக மாற்ற முயல்வதாகவும், இந்திய தேர்தல் ஆணையம் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இது தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக பாஜக-வின் தொலைநோக்கு திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் கடும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ள நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: செப்.9 ல் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்...தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
பீகாரைச் சேர்ந்தவர்களை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என எச்சரித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் தமிழக வாக்காளர்களின் உரிமையில் தலையிடும் நடவடிக்கை எனவும் கூறினார்.
வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்ந்த தொழிலாளி பீகார்க்குச் சென்று ஏன் வாக்களிக்கக்கூடாது என கேள்வி எழுப்பிய அவர், சத் பூஜை விழாவின் போது புலம்பெயர்ந்த தொழிலாளி பீகார் திரும்பவில்லையா என கேட்டுள்ளார்.
புலம்பெயர்ந்தோருக்கு பிஹாரில் நிரந்தர வீடு இருப்பின் எப்படி இங்கு வாக்காளராக முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களை பயன்படுத்தி மாநில தேர்தல் தன்மையை மாற்ற முயல்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் தவெக...அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு