அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை... விரைவாக விசாரணை... களத்தில் இறங்கப்போகும் தேர்தல் ஆணையம்!!
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, உள்கட்சி விவகாரம் குறித்து அதிகார வரம்பு உள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து ஏழு வாரங்கள் கடந்த பின்னும், அதிகாரவரம்பு குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை எனக் கூறி, இந்த ஆரம்பகட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், தேர்தல் ஆணையம் ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமல் இருப்பது தேவையற்றது.
இதையும் படிங்க: ஜனநாயக உரிமைகளை கேள்விக்குறியாக்கும் புதிய நடைமுறை.. ஆதவ் அர்ஜுனா வலியுறுத்துவது என்ன..?
இது தேவையில்லாத தவறான தகவல்களை பரப்ப வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ஆரம்ப கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து கேட்டு தெரிவிக்குமாறு தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் மேலும் கால அவகாசம் வேண்டும் என்றும், எவ்வளவு விரைவாக நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்தவோம்,காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் என தெரிவித்தார். அப்போது ஓபிஎஸ் மற்றும் பெங்களூர் புகழேந்தி தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, தங்கள் தரப்புக்கு மனுவின் நகல்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்ததையடுத்து,அவர்களுக்கு நகல்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 10 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 24 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை? - சாட்டையைச் சுழற்ற தயாராகும் தேர்தல் ஆணையம்!