×
 

2 நாள்தான் டைம்!! பூத் சிலிப் வழங்கும் பணியை விரைந்து முடிக்க ஏற்பாடு!

பூத் சிலிப்புகளை வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பே வினியோகம் செய்து முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், வாக்காளர் தகவல் சீட்டுகள் (பூத் சிலிப்) வினியோகப் பணியை வாக்குப்பதிவுக்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன்பே முடிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஏப்ரல் 23-ம் தேதி (வியாழக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பூத் சிலிப் வினியோகப் பணி ஏற்கனவே தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாக்காளருக்கும் வழங்கப்படும் இந்த சீட்டில், அவரது பெயர், வாக்குச்சாவடி எண், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம், வாக்குச்சாவடி அமைவிடத்தின் வரைபடம், QR குறியீடு உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளன. மேலும், வாக்காளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளன.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வீடு வீடாகச் சென்று இந்த சீட்டுகளை வழங்குவார்கள். வாக்குப்பதிவுக்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன்பாகவே அனைத்து வாக்காளர்களுக்கும் சீட்டுகள் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்குள் இந்தப் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திமுகவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு!! தமிழகம் வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!! ஏப்., 20-ல் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக பிரசாரம்!!

வாக்காளர்களின் வசதிக்காக சீட்டுகள் எளிதில் படிக்கக்கூடிய வகையில், பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளன. பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு பிரெய்லி மொழியில் சிறப்பு சீட்டுகளும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீட்டுகள் விநியோகத்தின்போது வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள், பி.எல்.ஓ.க்களுடன் செல்லலாம். ஆனால், அங்கீகரிக்கப்படாத முறையில் சீட்டுகளை விநியோகிப்பது அல்லது வைத்திருப்பது சட்ட விதிமீறலாகக் கருதப்படும். இதற்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

முக்கியமாக, பூத் சிலிப் மட்டும் வாக்குப்பதிவுக்கு போதுமான அடையாளச் சான்று அல்ல. வாக்காளர்கள் தங்கள் வாக்கைச் செலுத்த வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு, வாக்குப்பதிவு நாளில் கூட்ட நெரிசலை குறைத்து, வாக்காளர்கள் விரைவாக வாக்களிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு!! காத்திருக்கும் ட்விஸ்ட்!! கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம்பெறுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share