டெலிவரி வேனுக்குள் பறக்கும் படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... மூட்டை, மூட்டையாய் தங்க, வைர நகைகள்... சிக்கியது எப்படி?
2 கோடியே 39 லட்சம் மதிப்பிலான தங்க வெள்ளி வைர நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பறக்கும் படையினர் 2 கோடியே 39 லட்சம் மதிப்பிலான தங்க வெள்ளி வைர நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நகைகளுக்கான ஜிஎஸ்டி வருமான வரி ஆவணங்கள் இல்லாததால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது தக்க ஆவணங்களை காட்டி திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என வருவாய் கோட்டாட்சியர் லெனின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பணம் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா என பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தோட்டக்கலை துறை அலுவலர் வெற்றிவேல் மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் பறக்கும் படையினர் நாமக்கல் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது தனியார் கல்லூரி அருகே நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டிற்கு வந்து கொண்டிருந்த டெலிவரி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த டெலிவரி வேன் சேலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது. பெரிய பெரிய வியாபாரிகளிடமிருந்து தங்கம் வெள்ளி வைர நகைகளை வாங்கி மற்ற ஊர்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வந்துள்ளனர். சோதனையில் 2 கோடி 39 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி வைர நகைகள் மூட்டை, மூட்டையாக இருந்தது தெரியவந்தது.ஒவ்வொரு மூட்டையிலும் கொண்டு செல்ல வேண்டிய முகவரியும் இருந்தது துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் இந்த தனியார் டெலிவரி வேன் வந்து கொண்டிருந்தது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் கேரளம் சட்டமன்ற தேர்தல்..!! வேகமெடுக்கும் அரசியல் கட்சிகள்..!! களமிறங்கும் கலக்கல் 'சேச்சி'கள்..!!
பறக்கும் படையினர் இந்த நகைகளை கைப்பற்றி திருச்செங்கோடு கோட்டாட்சியர் லெனின் வசம் ஒப்படைத்தனர். இந்த நகைகள் எங்கிருந்து வந்தன?, எங்கு கொண்டு போய் டெலிவரி கொடுக்க வேண்டும் என்ற விவரம் இருந்தது. ஆனால் மத்திய, மாநில வரித்துறையினருக்கு சம்பந்தப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் வரி செலுத்திய ஆவணங்கள் ஏதுமில்லை. இதன் காரணமாக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து விசாரித்த பின் தான் இந்த நகைகள் வரி செலுத்தப்பட்டவையா? இல்லையா? என்பது தெரிய வரும் நகைகளை கொண்டு வந்த பாபு என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன தக்க ஆவணங்களை காட்டி நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என வருவாய் கோட்டாட்சியர் லெனின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு.. நெருங்கும் தேர்தல்..!! தமிழகத்திற்கு 327 பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!