அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு! தனி விமானத்தில் பறந்ததால் தமிழக பாஜகவில் பரபரப்பு!
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அவசர அழைப்பு விடுத்ததின் காரணமாக, அண்ணாமலை சென்னையில் இருந்து, தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளரும் முன்னாள் மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பாஜக மேலிடத்தின் அவசர அழைப்பை ஏற்று இன்று இரவு 7:20 மணிக்குச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று உச்சகட்டத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அண்ணாமலைக்கு, டெல்லியில் இருந்து உடனடியாக வருமாறு அழைப்பு வந்தது. இதனையடுத்து, பரப்புரையைப் பாதியில் நிறுத்திவிட்டுப் புதுச்சேரியிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மாலை 6 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார்.
சென்னை விமான நிலைய விஐபி ஓய்வறையில் சிறிது நேரம் தங்கியிருந்த அவர், அங்கிருந்து அவருக்காகத் தயார் நிலையில் இருந்த தனி விமானத்தில் இரவு 7:20 மணிக்கு டெல்லிக்குப் புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் நேரடி அழைப்பின் பேரில் இந்தப் பயணம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலைக்கு வாக்கு கேட்பது மகிழ்ச்சி! ராமபுரத்தில் டிடிவி தினகரன் நெகிழ்ச்சி!
தமிழக பாஜகவின் தற்போதைய தலைமைக்கும் அண்ணாமலைக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்ற பேச்சு ஏற்கனவே நிலவி வருகிறது. அண்ணாமலைக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கிளம்பிய சர்ச்சைகளுக்கு, தமிழகத் தேர்வுக் குழுவினர் எனது பெயரை அனுப்பவில்லை என அவர் சமீபத்தில் விரக்தியுடன் பதிலளித்திருந்தார். இருப்பினும், தற்போது அவர் டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளதால், தேர்தலுக்குப் பிறகு அவருக்குக் கட்சியில் தேசிய அளவிலான முக்கியப் பொறுப்புகள் அல்லது தேர்தல் வியூகத்தில் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை, தற்போது தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரமாகப் பரப்புரை செய்து வருகிறார். அவரது வருகை இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தப் பயணம் தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் வேளையில் அண்ணாமலையின் இந்தத் திடீர் டெல்லிப் பயணம், தமிழக பாஜக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சீர்காழி தேர்தல் பரப்புரை: நான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை! முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிமிக்க பேச்சு!