×
 

நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிசாமி திடீர் அழைப்பு!

நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். 28 நிர்வாகிகள் நீக்கத்திற்குப் பின் புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்க எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுக உட்கட்சிப் பூசலும் பிளவுகளும் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை காலை 9 மணியளவில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தங்களது இல்லத்தில் அவசர மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிரடியாக அழைப்பு விடுத்துள்ளார். 

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண பிளவு மற்றும் உட்கட்சி மோதல்களுக்கு இடையே, அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாக இந்த அவசர அழைப்பு மிக ரகசியமாகவும் விறுவிறுப்பாகவும் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 28 பேரை எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியை விட்டு அதிரடியாக நீக்கியதைத் தொடர்ந்து நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இது என்பதால், கோட்டை வட்டார அரசியல் களத்தில் அனல் பறக்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

இதையும் படிங்க: 25 பேரின் பதவியும் பறிக்கப்படும்! அதிமுக எம்பி தம்பிதுரை எச்சரிக்கை!

28 பேர் நீக்கப்பட்ட அந்தந்த மாவட்டங்களுக்குப் புதிய மாவட்டச் செயலாளர்களை இபிஎஸ் உடனடியாக நியமித்துள்ள நிலையில், புதிய நிர்வாகிகளுடன் அவர் நடத்தவுள்ள இந்த முதல் ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மறுபுறம், கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைச் சரிசெய்யவும், தங்களது பலத்தை நிரூபிக்கவும் உடனடியாகக் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என எஸ்பி வேலுமணி தரப்பினர் தீவிரமாகப் பின்னணியில் காய்நகர்த்தி, முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த அதிரடிச் சூழலில், எஸ்பி வேலுமணி தரப்பின் வியூகங்களைத் தவிடுபொடியாக்கவும், கட்சியைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், புதிய மாவட்டச் செயலாளர்களுக்குப் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும், ரகசிய அசைன்மென்ட்டுகளையும் வழங்குவதற்காகவே எடப்பாடி பழனிசாமி இந்த அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் எனத் தெரிகிறது. 

நாளை காலை நடைபெறவிருக்கும் இந்த அதிரடிக் கூட்டத்தின் முடிவில், அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதால், தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பின் முனையில் காத்துக்கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: கையெழுத்து கேட்டா போடாதீங்க..! உஷாரு..! ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share