எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
நாளை முதல் தூத்துக்குடி, நெல்லை, சிவகாசி எனத் தேர்தல் களம் அதிர்கிறது. அதிமுக பொதுச்செயலாளரின் விரிவான பயணத் திட்டம் வெளியீடு,
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், நாளை முதல் தென் மாவட்டங்களில் தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். இன்று ஆர்.கே. நகர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்த அவர், நாளை காலை விமானம் மூலம் தென் தமிழகம் புறப்படுகிறார்.
கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பயணத் திட்டத்தின்படி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை அவர் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளிப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நாளை (மார்ச் 29, ஞாயிறு): காலை 10:05 மணிக்குச் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி மற்றும் ராதாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். நாளை இரவு திருநெல்வேலியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
இதையும் படிங்க: மக்கள் மத்தியில் மாயையை உண்டாக்குகிறார் விஜய்! தவெக-வை சாடிய வீரலட்சுமி அதிரடி பேட்டி!
மார்ச் 30 (திங்கள்): திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டுப் மதியம் 2 மணிக்குக் கடையநல்லூர் மற்றும் மாலை 5 மணிக்குக் கோவில்பட்டி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். அன்று இரவு சிவகாசியில் தங்குகிறார்.
மார்ச் 31 (செவ்வாய்): சிவகாசியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். அன்று இரவு பரமக்குடியில் தங்குகிறார்.
ஏப்ரல் 1 (புதன்): காலை சிவகங்கையில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் அவர், மாலை 5 மணிக்கு புதுக்கோட்டையிலும், இரவு 8 மணிக்குத் திருச்சியிலும் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். அன்று இரவு திருச்சியில் தங்கி தனது பயணத் திட்டத்தின் இந்தப் பகுதியை நிறைவு செய்கிறார்.
அதிமுக-வின் பலமான கோட்டைகளாகக் கருதப்படும் தென் மாவட்டங்களில், எடப்பாடி பழனிசாமி அவர்களின் இந்தப் பயணம் அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தேவர் மற்றும் நாடார் சமூக வாக்குகள் அதிகம் உள்ள பகுதிகளில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நினைவூட்டியும் அவர் தனது உரையை நிகழ்த்தவுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடியின் இந்தப் பிரசாரப் பயணம் தேர்தல் முடிவுகளில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: திமுக வேட்பாளர் பட்டியல் 2026: 164 தொகுதிகளில் உதயமாகும் சூரியன்!