×
 

கட்சி தாவுறவங்க எங்கயும் நிலைக்க மாட்டாங்க! மைத்ரேயனை பூந்து விளாசிய இபிஎஸ்..!

கட்சி தாவுபவர்கள் எங்கும் நிலைக்க மாட்டார்கள் என எடப்பாடி பழனிச்சாமி மைத்ரேயனை விமர்சித்துள்ளார்.

மைத்ரேயனின் அரசியல் பயணம் 1990களில் ஆரம்பமாகிறது. அவர் முதலில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) உறுப்பினராக இணைந்து, பின்னர் 1991ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

 பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராகத் தொடங்கி, 1995 முதல் 1997 வரை தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை மாநில துணைத் தலைவராகவும், பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார். 

இந்தப் பதவிகள் அவருக்கு அரசியல் களத்தில் ஒரு அடையாளத்தை வழங்கின. ஆனால், 1999ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று, அவர் பாஜகவிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். 

இதையும் படிங்க: இபிஎஸ்க்கு எம்ஜிஆர், ஜெயலலிதா-னு நெனைப்பு.. அதிமுகவில் இருந்து விலகிய மைத்ரேயன் விமர்சனம்..!

இந்த மாற்றம் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. அதிமுகவில் இணைந்த பிறகு, மைத்ரேயன் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக உயர்ந்தார். 

2001ஆம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 2002ஆம் ஆண்டு முதல் 2019 வரை மூன்று முறை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். 

ஜெயலலிதாவின் ஆட்சியில், குறிப்பாக டெல்லியில் கட்சியின் நலன்களைக் கவனிக்கும் முக்கிய பொறுப்புகளை அவர் வகித்தார். தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பல முக்கிய குழுக்களில் அவர் இடம்பெற்றார். 

ஜெயலலிதாவின் மறைவு வரை, அவர் அதிமுகவில் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் தீவிரமடைந்தன. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையேயான பிளவு மைத்ரேயனின் அரசியல் பயணத்தை மேலும் சிக்கலாக்கியது. 

ஆரம்பத்தில் ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தம் அணியில் இணைந்த மைத்ரேயன், பின்னர் இபிஎஸ் தரப்புக்கு மாறினார். ஆனால், 2019ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர் அதிருப்தியடைந்தார்.

 இதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நீக்கம் அவரது அரசியல் வாழ்க்கையில் மற்றொரு திருப்புமுனையாக அமைந்தது.2023ஆம் ஆண்டு, மைத்ரேயன் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

 பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு, பிரதமர் மோடியின் தலைமையை வலுப்படுத்துவதாக அறிவித்தார். ஆனால், பாஜகவில் அவருக்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்காததால், 2024 செப்டம்பரில் மீண்டும் அதிமுகவிற்குத் திரும்பினார். இப்படி பாஜக - அதிமுக கட்சிகளுக்கு மாறி மாறி சென்று வந்த மைத்ரேயன், இன்று திமுகவில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த மைத்ரேயனை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் கட்சி மாறி செல்பவர்கள் எந்த கட்சியிலும் நிலையாக இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இபிஎஸ்க்கு எம்ஜிஆர், ஜெயலலிதா-னு நெனைப்பு.. அதிமுகவில் இருந்து விலகிய மைத்ரேயன் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share