×
 

ஜெ.வின் 9ம் ஆண்டு நினைவு நாள்..!! இது நடந்தே தீரும்..!! நினைவிடத்தில் சபதம் எடுத்த இபிஎஸ்..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மக்கள் மனதில் ஒலித்த "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற முழக்கத்தின் வடிவமே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். இவர் மறைந்து 9 ஆண்டுகள் கடந்திருந்தாலும் அதிமுக தொண்டர்களின் மனதில் அவர் இன்னும் அம்மாவாகவே வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டு, 'அம்மா' என்று அழைக்கப்படும் ஜெயலலிதாவின் சாதனைகளை நினைவுகூர்ந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி  அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் வழியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று சபதம் எடுத்தார். 

இந்த நினைவு நிகழ்ச்சியில், பழனிசாமி தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து, நினைவிடத்தைச் சுற்றி நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியின் போது, "அம்மா வழியில் அதிமுக" என்ற பதாகைகள் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் ஏந்தப்பட்டன.

இதையும் படிங்க: விஜயை முதலமைச்சராக்க உயிர் மூச்சு உள்ளவரை பணியாற்றுவேன்… செங்கோட்டையன் திட்டவட்டம்..!

ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னையில் மட்டுமின்றி, மாவட்ட தலைநகரங்களில் உள்ள கட்சி அலுவலகங்களிலும் தொண்டர்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.

ஜெயலலிதா, தமிழக அரசியலில் பெண் தலைவராக பிரகாசித்தவர். அவர் 1991 முதல் 2016 வரை பலமுறை முதலமைச்சராகப் பதவி வகித்தார். அவரது ஆட்சியில், கல்வி, சுகாதாரம், பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதிமுக தொண்டர்கள், அவரை 'புரட்சித் தலைவி' என்று போற்றுகின்றனர். இந்நினைவு நாளில், சமூக வலைதளங்களில் #Jayalalithaa9thAnniversary என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. 

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம், “மக்களால் நான்; மக்களுக்காவே நான்” என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,

நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை, இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.

தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, “அமைதி, வளம், வளர்ச்சி” என்று அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை,
அதிமுக தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING: தவெகவில் ஏன் இணைந்தேன்... உண்மையைப் போட்டு உடைத்து செங்கோட்டையன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share