மனசாட்சி இல்லையா? அஸ்தியை கரைக்குற மாதிரி மனுக்கள் கொட்டி இருக்கீங்க! இபிஎஸ் கண்டனம்..!
உங்களுடன் ஸ்டாலின் முகங்களில் பெறப்பட்ட மனுக்கள் குப்பையில் கொட்டப்பட்டு இருக்கும் நிகழ்வுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 2025 ஜூலை 15 முதல் நவம்பர் 2025 வரை தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்களை நடத்துவதற்காக அறிவிக்கப்பட்டது. இந்த முகாம்களில், மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனு வடிவில் அளிக்கலாம், மேலும் அரசு அதிகாரிகள் அவற்றை உடனடியாக பரிசீலித்து தீர்வு வழங்குவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. சாதி சான்று, பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஆதார் திருத்தங்கள், ரேஷன் அட்டை முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் இத்திட்டத்தின் மூலம், மக்களின் கோரிக்கைகளையும் புகார்களையும் நேரடியாகப் பெற்று, அவற்றை விரைவாகவும் வெளிப்படையாகவும் தீர்க்க அரசு முயற்சித்து வருகிறது. இருப்பினும், மனுக்கள் குப்பையில் வீசப்பட்டதாக வெளியான தகவல்கள் இத்திட்டத்தின் செயல்பாட்டு நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளன.
மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும் எனக் கூறி விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனத்தை தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கறுப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை என்றும் நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது என்றும் சாடினார்.
இதையும் படிங்க: அது செல்லாது.. அதிமுக விதி திருத்ததிற்கு எதிராக CASE போட கூடாது.. ஹைகோர்ட் தடாலடி உத்தரவு..!
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, சிவங்கங்கை வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களின் வலிகளை , உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி , உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ”எம்ஜிஆரின் அதிமுக” இன்று ”அமித்ஷாவின் அதிமுக”வாக மாறிவிட்டது... இபிஎஸை அலர்ட் செய்த காங்கிரஸ் எம்.பி...!