பெரும் புகழுக்கு சொந்தக்காரர் பெரும்பிடுகு முத்தரையர்… அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு EPS நன்றி…!
பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட நிலையில் பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.
பெரும்பிடுகு முத்தரையர் தமிழக வரலாற்றில் முக்கியமான அரசர்களில் ஒருவர். 7 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மத்திய தமிழகப் பகுதிகளை ஆண்ட முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்த இவர், தோல்வியே அறியாத வீரமிக்க போர்வீரராகவும், தமிழ் கலாசாரத்தின் பாதுகாவலராகவும் போற்றப்படுபவர். 16 போர்களில் வெற்றி பெற்று, கோயில்களுக்கான நன்கொடைகள், நீர்ப்பாசன வசதிகள், தமிழ் இலக்கிய ஆதரவு ஆகியவற்றால் புகழ்பெற்ற இவரது புகழை நிலைநாட்டும் வகையில், நீண்டகால கோரிக்கையொன்று நிறைவேறியுள்ளது.
முத்தரையர் சமுதாயத்தினரும், தமிழக அரசியல் தலைவர்களும் பல ஆண்டுகளாக பெரும்பிடுகு முத்தரையருக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக, 2025 மே மாதம் இவரது 1350 ஆவது சதய விழாவையொட்டி திருச்சியில் நடந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அடுத்த ஆண்டு தபால் தலை வெளியிடப்படும் என அறிவித்தார். இந்த முயற்சிகளுக்கு பாஜக தலைவர்கள், மத்திய அரசு ஆதரவு அளித்து வந்த நிலையில், நேற்று டெல்லியில் உள்ள குடியரசு துணை தலைவர் இல்லத்தில் சிறப்பான விழா நடைபெற்றது. பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேரடியாக நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட நிலையில் பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார். தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர், முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர்,
இதையும் படிங்க: அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர் அவர்..!! சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனுக்கும் அதிமுக சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 4 நாட்கள்.. சுற்றுப்பயணத்தை தொடங்கும் பிரதமர் மோடி..!! இப்ப எந்தெந்த நாடுகள் தெரியுமா..??