ஆலங்குளத்தில் பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
கள் இறக்கியதாக கூறித் தொழிலாளி மணிகண்டன் மீது போலீஸ் எஸ்.ஐ. தாக்குதல்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி ஒருவரைப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). பனை மரம் ஏறும் தொழிலாளியான இவர், நேற்று வழக்கம் போலத் தனது பனை மரத்தில் பதநீர் இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் (SI) இசக்கி ராஜா, மணிகண்டன் சட்டவிரோதமாக கள் இறக்குவதாகக் கூறி விசாரிக்க முயன்றுள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கியால் மணிகண்டனைச் சுட்டுள்ளார்.
மொத்தம் 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதில் 2 குண்டுகள் மணிகண்டனின் இரண்டு கால்களையும் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டன் உடனடியாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜாவிற்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் சிகிச்சையில் உள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமையட்டும்.. 3 மாசத்துல கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும்..!! மக்களுக்கு இபிஎஸ் ப்ராமிஸ்..!!
இச்சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி: பதநீர் இறக்கிய தொழிலாளி மீது கள் இறக்கியதாகப் பொய்ப் புகார் கூறித் துப்பாக்கிச் சூடு நடத்தியது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. திமுக அரசின் காவல்துறை தொடர்ந்து ஏவல் துறையாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம் பனைத் தொழிலாளர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி-யை வலியுறுத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் மற்றும் பனைத் தொழிலாளர் சங்கத்தினர் ஆலங்குளம் சாலை சந்திப்பில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். "குற்றம் செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, துப்பாக்கியால் சுடுவது அப்பட்டமான மனித உரிமை மீறல்" என மக்கள் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் நடந்துள்ள இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது.
இதையும் படிங்க: சீர்காழி தேர்தல் பரப்புரை: நான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை! முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிமிக்க பேச்சு!