தவெக அரசை எச்சரித்த இபிஎஸ்! காவிரி நீரை உடனே வாங்கலனா அறமே எமனாக மாறித் தண்டிக்கும்!
தமிழகத்திற்குரிய ஜூன், ஜூலை மாதக் காவிரி பங்கு நீரை உடனடியாகப் பெறத் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கர்நாடகா தண்ணீர் தராவிட்டால் தமிழக அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சரை நீக்கத் தயாரா என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி நதிநீரில் தமிழகத்திற்கு உள்ள தார்மீக உரிமைகளை உதாசீனப்படுத்தி வரும் கர்நாடக காங்கிரஸ் அரசின் திமிர்த்தனத்தைக் கைகட்டி வேடிக்கை பார்க்காமல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்குரிய பங்கு நீரை அசுர வேகத்தில் பெறத் தமிழக வெற்றிக் கழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மிக அழுத்தமான வாதங்களுடன் கூடிய அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள தார்மீக அறிக்கையின் விபரங்களின்படி, நமது பரந்து விரிந்த பாரதத்தில் பல்வேறு மாநில ஆட்சியாளர்கள் உள்ளனர். அவர்களில் திமிர்த்தனமும், அதிகார மமதையும், சர்வாதிகார மனப்பான்மையும், சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் எண்ணமும் கொண்ட ஒரே ஆட்சியாளர்களாகத் திகழ்வது கர்நாடகத்தை நிர்வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்பது நம் நாட்டின் சாபக்கேடு என்று மிகக் கடுமையான விமரிசனக் கணைகளைத் தொடுத்துள்ளார். தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களின் வேளாண் தொழிலுக்குக் காவிரி நீரை நம்பித்தான் இருக்கிறார்கள் என்றும், சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட நுகர்வோர் மற்றும் மக்கள் குடிநீருக்குக் காவிரியையே பயன்படுத்தி வரும் சூழலில், ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்க வேண்டும் என்று கர்நாடக ஆட்சியாளர்கள் நினைப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
மேலும், காவிரி நதிநீர் தகராறு தீர்ப்பாயமும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிப் பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், அவைகளை உதாசீனப்படுத்துவதையே கர்நாடக காங்கிரஸ் அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்று இபிஎஸ் சாடியுள்ளார். கர்நாடகத்தின் பெரும் வளர்ச்சிக்கு அங்கு வாழும் தமிழர்களின் உழைப்புதான் காரணம் என்பதை அங்குள்ள முதலமைச்சரோ அல்லது நீர்ப்பாசனத் துறை அமைச்சரோ மறந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என அம்மாநில அமைச்சர்கள் கூறுவது வடிகட்டிய பொய் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களைக் கர்நாடகா மதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் கர்நாடக அரசின் போக்கைத் தவெக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கவில்லையெனில், 'தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார்' என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்கத் தவெக அரசின் முதலமைச்சர் விஜய் அவர்கள் தயாரா?" என்று அதிரடி அரசியல் சவாலை முன்வைத்துள்ளார். இறுதியாக, சிலப்பதிகாரத்தின் புகழ்பெற்ற தார்மீக வரிகளான 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்பதை நினைவூட்டி, ஆட்சிப் பொறுப்பில் இருந்து தவறி மக்களுக்கு அநீதி இழைப்பவர்களை அந்த அறநெறியே தண்டிக்கக் கூற்றாக மாறும் எனத் தமிழக, கர்நாடக இரு ஆட்சியாளர்களையும் எச்சரிப்பதாகத் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி தலையிட வேண்டும்: கர்நாடக முதல்வர் சிவக்குமாரை தடுக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!