×
 

சாம்பாரில் சாணிப் பவுடர்..! குற்றவாளி ARREST..!! சம்பவம் குறித்து ஆட்சியர் விளக்கம்..!!

சாம்பாரில் சாணிப் பவுடர் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபயனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் சாம்பாரில் சாணிப் பவுடர் கலக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த விவகாரம், தனிப்பட்ட விரோதத்தின் விளைவாக நடந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது.பள்ளியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி காலை உணவுத் தயாரிப்பின் போது, தரத்தைச் சோதிக்கும் வகையில் ஆசிரியை ரேவதி சாம்பாரை ருசித்துப் பார்த்தார். அப்போது அதில் கசப்புச் சுவை இருப்பதை உணர்ந்தார். இதைத் தலைமை ஆசிரியை குமுதாவிடம் தெரிவித்தார். பின்னர் சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆலோசனையின் பேரில் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.விசாரணையில், சாணிப் பவுடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் கலக்கப்படவில்லை என்பது உறுதியானது.

ஆசிரியர் ருசித்துப் பார்ப்பதற்காகத் தனியாக வைக்கப்பட்ட சிறிய அளவு சாம்பாரில் மட்டுமே அது கலக்கப்பட்டிருந்தது. போலீசார் விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இந்தச் செயலைத் தூண்டியதாகத் தெரியவந்தது. அவர் ஒரு மாணவியிடம் பத்து ரூபாய் கொடுத்து, அருகிலுள்ள கடையில் சாணிப் பவுடர் வாங்கி சாம்பாரில் கலக்குமாறு கூறியிருந்தார். மாணவி ஐந்து ரூபாய்க்கு சிற்றுண்டி வாங்கி, மீதமுள்ள தொகையில் சாணிப் பவுடர் வாங்கி, ஆசிரியர் மாதிரிக்காக வைக்கப்பட்ட சாம்பாரில் கலந்திருந்தார்.ஆறுமுகத்தின் மனைவி ஆலம்மாள் முன்பு பள்ளியின் காலை உணவுத் திட்டத்தில் சமையலராகப் பணியாற்றி வந்தார்.

இதையும் படிங்க: நடிகர் விக்ரம் வீடியோவால் சர்ச்சை! சிக்கியதா மிகப்பெரிய வனவிலங்கு கடத்தல் கும்பல்? புதிய ட்விஸ்ட்!

சமையல் தரத்தில் குறைபாடுகள் குறித்து புகார்கள் எழுந்ததால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டு, வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட கோபத்தால் ஆறுமுகம் இத்தகைய செயலைச் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. சத்தியமங்கலம் போலீசார் ஆறுமுகத்தைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டார்.இந்தச் சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விளக்கம் அளித்துள்ளார். மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு முன்பு உணவு மாதிரியை எடுத்து வைக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த நடைமுறையை இனிமேல் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அறிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவின் தரத்தைச் சரிபார்க்கும் இந்த முறை முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: மின் வயரை மிதித்து ஆறாம் வகுப்பு மாணவன் பலி... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்... ஈரோட்டில் பரபரப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share