×
 

அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!

'கோஷ்டி பூசலில் மஹாராஷ்டிராவையே மிஞ்சி விட்டீர்கள்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் வருத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவுக்குள் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட, திமுக கோட்டையாகக் கருதப்படும் தொகுதிகளை மட்டும் ஒதுக்கியதாக கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும், அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக பாஜகவினரே சமூக வலைதளங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்தச் சூழலில், சென்னையில் முகாமிட்டுள்ள தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பீயூஷ் கோயல், அதிருப்தியில் இருந்த மாநில இளைஞரணித் தலைவர் சூர்யா உள்ளிட்டோரின் வீடுகளுக்கே நேரில் சென்று சமாதானப்படுத்த முயன்றார். மாநிலப் பொதுச்செயலர் ஏ.பி. முருகானந்தம், துணைத் தலைவர்கள் டால்பின் ஸ்ரீதரன், ம. வெங்கடேசன், மாநிலச் செயலர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

ஒரு வாரத்துக்கு மேலாக தமிழகத்தில் தங்கியிருந்த பீயூஷ் கோயல், கட்சி நிர்வாகிகளிடம் உரையாடும்போது தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஒரு தொகுதியாச்சும் மாத்தி வாங்குங்க!! ஓயாத பிரச்னை!! பியூஸ் கோயலிடம் மல்லுக்கட்டும் பாஜக நிர்வாகிகள்!!!

அவர் கூறியதாவது: “என் சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவில் பாஜகவுக்கு கோஷ்டி பூசல் அதிகம். மாவட்ட அளவில் கூட பல கோஷ்டிகள் உள்ளன. ஆனால் அங்கு ஆட்சியில் இருப்பதாலும், வலுவான ஓட்டு வங்கி இருப்பதாலும் பெரிய பாதிப்பு இல்லை. 

ஆனால் தமிழகத்தில் பாஜக இன்னும் வளரும் கட்டத்தில் உள்ளது. இங்கு மஹாராஷ்டிராவைவிட அதிக கோஷ்டி பூசல் உள்ளது. கோஷ்டி பூசலில் நீங்கள் எங்களையே மிஞ்சி விட்டீர்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்ததாக பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக பாஜகவில் நிலவும் உள் மோதல், கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு சம்பந்தமான பிரச்னைகள் காரணமாக மேலும் தீவிரமடைந்துள்ளது. மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலின் சமாதான முயற்சி எந்த அளவுக்கு பலன் தரும் என்பது அரசியல் வட்டாரத்தில் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜகவுக்குள் ஏற்பட்டுள்ள இந்தக் கோஷ்டி பூசல், கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமையும் என அஞ்சப்படுகிறது. 

இதையும் படிங்க: பிரதமர் மோடி வரும் நேரமாச்சு!! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?! நயினார் நாகேந்திரன் கொடுத்த அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share