தீப்பெட்டி தொழிலை காக்க வேண்டும்: பியூஷ் கோயலிடம் கடம்பூர் ராஜு கோரிக்கை மனு!
பிளாஸ்டிக் லைட்டர்களின் ஊடுருவலால் தீப்பெட்டித் தொழில் அழிவை நோக்கிச் செல்வதால், தொழிலைக் காக்க வேண்டும் என்று பியூஷ் கோயலிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கோரிக்கை விடுத்துள்ளார்.
தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் தீப்பெட்டித் தொழில், தற்போது பிளாஸ்டிக் லைட்டர்களின் ஊடுருவலால் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை கமலாலயத்தில் தங்கியிருந்த ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலிடம் அவர் இன்று நேரில் மனு அளித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த கடம்பூர் ராஜு, செய்தியாளர்களிடம் பேசுகையில், "தென் மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக இருப்பது தீப்பெட்டித் தொழில் மட்டுமே. ஏற்கனவே தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைத்து இந்தத் தொழில் ஓரளவு பாதுகாக்கப்பட்டது. இருப்பினும், தற்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் விற்கப்படும் விலை குறைந்த பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டித் தொழில் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி, பிளாஸ்டிக் லைட்டர்களுக்குத் தடை விதிக்கவோ அல்லது கூடுதல் கட்டுப்பாடு விதிக்கவோ வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்திப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விளக்கமளித்த அவர், "அமைச்சர் இன்று தமிழகம் வந்தபோது தீப்பெட்டித் தொழில் நிர்வாகிகளைச் சந்திப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கமலாலயம் வந்தவுடன் நேரடியாகத் தேர்தல் ஆலோசனைக் கூட்ட அரங்கிற்குச் சென்றுவிட்டார். கூட்டம் தொடங்கிவிட்ட நிலையில், இடையில் புகுந்து கோரிக்கை வைப்பது முறையாக இருக்காது என்ற காரணத்தினால், நாகரிகம் கருதி அவர் வெளியே வரும் வரை காத்திருந்து மனு அளித்தேன். எங்களது கோரிக்கைகளைப் பொறுமையாகக் கேட்டறிந்த அமைச்சர், இது குறித்து உரிய ஆவணங்களைச் சரிபார்த்துத் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்" எனத் தெரிவித்தார். அரசியல் கூட்டணிகள் ஒருபுறம் இருந்தாலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக இந்தப் பேச்சுவார்த்தை அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: டிட்வா புயலால் உருக்குலைந்த இலங்கை..!! நிவாரண நிதியை அறிவித்தது இந்தியா..!!
இதையும் படிங்க: "ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை!" – களத்தில் குதிக்கும் சசிகலா; 2026-ல் 'ஜெயலலிதா ஆட்சி' என சபதம்!