×
 

விடிந்ததும் கேட்ட வெடி சத்தம்.. சிவகாசி அருகே அதிகாலையில் பயங்கரம்..!

சிவகாசி அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் அதிகாலை வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஆங்காங்கே வெடி விபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பாட்டாசு தயாரிப்பதற்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன. இங்குப் பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆலைகளில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அங்குள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. 

இந்நிலையில் சிவகாசி அருகே உள்ள அம்மாப்பட்டியில் தங்கபாண்டி என்பவருக்குச் சொந்தமான கணேஷ்வரி பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. சென்னை உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வெடியின் அதிர்வு ஏற்பட்டதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பதற்றம் அடைந்தனர். இந்த வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: படபடவென வெடித்து சிதறிய பட்டாசு.. உடல்கருகி இறந்த தொழிலாளர்கள்.. சிவகாசியில் மீண்டும் சோகம்..!

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு அடுத்தடுத்த அறைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் வானில் சென்று வெடிக்கும் பேன்சி ரக பட்டாசு தயாரிக்க அனுமதி இல்லாத நிலையில், உரிய அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்ததும், அவற்றை தயாரிக்க கலவை செய்த ரசாயன மூலப் பொருட்களை மீதம் வைத்துவிட்டு சென்ற நிலையில் அந்த ரசாயன மூலப்பொருள் நீர்த்து தானாகவே வெடித்துள்ளதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. 

அதிகாலையிலேயே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: ஏழு கிலோ மீட்டருக்கு அதிர்ந்த தெலங்கானா.. 3 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share