×
 

கரூர் சம்பவம் குறித்து போலி வழக்கா? தீவிரமாக ஆராயப்படும்... சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை...!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக போலி வழக்கு பதியப்பட்டு இருந்தால் தீவிரமாக ஆராயப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழக அரசியலின் வரலாற்றில் ஒரு கருப்பு பக்கமாகப் பதிவாகியுள்ளது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதம், 41 உயிர்களை பலி வாங்கியது. குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் உயிரிழந்தது மட்டுமல்லாமல் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது, முழு தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதை எடுத்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது மட்டுமல்லாமல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கேட்கட்டும் என நீதிபதிகள் கூறிவிட்டனர்.

இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றி கழகமும், சிபிஐ விசாரணை கோரி பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். அது மட்டுமல்லாது ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் குழு ஒன்றும் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி கையெழுத்து வாங்கி வழக்கு தொடரப்பட்டிருப்பதாக தமிழக அரசின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: திமுகவின் திட்டமிட்ட சதி… தவெகவை முடக்க முயல்கிறார்கள்… ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு…!

அப்போது, பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி கையெழுத்து பெற்று வழக்கு தொடரப்பட்டிருப்பதாக வரும் புகார்கள் தீவிரமாக ஆராயப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உயிரிழந்த சந்திராவின் கணவர் செல்வராஜ் தன்னை ஏமாற்றி கையெழுத்து பெற்று வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. போலி வழக்கு விவகாரத்தை தீவிரமாக ஆராய்ந்து தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு கூட உத்தரவு பிறப்பிப்போம் என்ற உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: எப்படி கிரிமினல் வழக்காச்சு? எதையும் சரியாக விசாரிக்கல… சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share