41 பேர் உயிரிழந்த சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை நாளை சந்திக்கிறார் விஜய்..!! கரூரிலிருந்து கிளம்பிய மக்கள்..!!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நாளை விஜய் சந்திக்க உள்ள நிலையில், அவர்கள் கரூரில் இருந்து தவெகவினர் ஏற்பாடு செய்த பேருந்துகளில் சென்னைக்கு புறப்பட்டனர்.
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கொடூரமான நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்ப உறுப்பினர்கள், தவெகவினர் ஏற்பாடு செய்த சிறப்புப் பேருந்துகளில் இன்று சென்னை புறப்பட்டனர். இந்தப் பயணம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவிக்கவும், தலைவர் விஜய்யை நேரில் சந்திக்கவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் 18 வயதுக்குக் கீழ் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களை உலுக்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக கரூர் விரைந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியையும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் அறிவித்தார்.
இதையும் படிங்க: தட்டிவிடு... தேர்தல் சின்னம் கேட்டு விண்ணப்பிக்க தயாராகும் தவெக...!
சம்பவத்துக்குப் பின் தவெகவினர் உடனடியாக செயல்பட்டனர். கரூர் மாவட்ட நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரித்து, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினர். தலைவர் விஜய்யின் உத்தரவுப்பேரில், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். "இழப்பை ஈடுகட்ட முடியாது, ஆனால் கட்சியாக நாங்கள் அவர்களுக்கு துணையாக இருப்போம்" என விஜய் உறுதியளித்தார்.
முதலில் கரூரில் உள்ள மண்டபத்தில், பாதிக்கப்பட்டோரை வரவழைத்து அவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டார். இதற்காக, கரூரில் மண்டபங்கள் பார்க்கப்பட்டது. ஆனால், விஜய்யின் சந்திப்புக்கு கரூரில் மண்டபங்கள் கிடைக்க சிக்கல் நீடித்ததால், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரைரையும், நெரிசலில் காயமடைந்தவர்களையும் சென்னைக்கு வரவழைத்து சந்திக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி மாமல்லபுரம் தனியார் விடுதியில் சந்திப்பு நிகழ்ச்சி நாளை காலை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று காலை கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் புறப்பட்டன. இவை தவெகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டவை. பயணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். பேருந்துகளில் உணவு, மருத்துவ உதவி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்கிறார்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் தவெக ஏற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பரபரப்பை கிளப்பும் கரூர் துயரச் சம்பவம்.. SIT-ஐ எதிர்க்கும் தவெக.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!!