திண்டுக்கல்லில் நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கு.. பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது..!
நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வதை திண்டுக்கல் போலீசார் இன்று கைது செய்தனர்.
தமிழகத்தின் பிரபல ரவுடிகளில் ஒருவரான மதுரை வரிச்சியூர் செல்வம், இன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தலைமறைவாக இருந்த இடத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக தேடப்பட்டு வந்த இந்த ரவுடியின் கைது, தென் மண்டல காவல் துறைக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வரிச்சியூர் செல்வம், கடந்த பத்தாண்டுகளாக கொலை, கட்டப்பஞ்சாயத்து, ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்காக போலீஸ் கண்காணிப்பில் இருந்தவர். 2023-ல் விருதுநகர் மாவட்டத்தில் கூட்டாளியான செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். உயர்நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவின் பிறகு விடுதலை செய்யப்பட்டாலும், புதிய கொலை மற்றும் மிரட்டல் வழக்குகளில் தொடர்ந்து தேடப்பட்டு வந்தார்.
இதையும் படிங்க: யார் இந்த ஹர்ஜித் கவுர்..?? 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில்.. திடீர் கைது..!!
இதனிடையே வரிச்சியூர் செல்வம் மீது, கொலை முயற்சி வழக்கு மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள சுகன்யா லாட்ஜில் குற்றவாளிகளான வரிச்சியூர் செல்வம், கேரளாவை சேர்ந்த சினோஜ், அஜிஸ், வர்கீஸ் ஆகியோர் மறைந்து இருந்துள்ளனர்.
இதனை அறிந்த சிலைமான் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் 12.03.2012ல் அவர்களை கைது செய்வதற்காக திண்டுக்கல் வந்துள்ளார். அப்போது, குற்றவாளிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே நடைபெற்ற மோதலில் காவல்துறையால் கேரளாவை சேர்ந்த சினோஜ் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜேஎம் 2ல் நடைபெற்று வந்தது. இதில் தொடர்ச்சியாக வரிச்சியூர் செல்வம் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் வரிச்சூர் செல்வத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, வத்தலகுண்டு பகுதியில் வைத்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் வரிச்சூர் செல்வத்தை கைது செய்தனர். மேலும் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்திற்கு வரிச்சூர் செல்வம் அழைத்து வரப்பட்டு, தற்போது, திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜே.எம் 2ல் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் இதுகுறித்து வரிச்சியூர் செல்வத்திடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையின்படி, செல்வம் தலைமறைவாக இருந்த காலத்தில் பல புதிய குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம். குறிப்பாக, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த மிரட்டல் மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் உள்ளன. இதற்கிடையே, செல்வத்தின் சகோதரர்கள் உள்ளிட்ட கூட்டாளிகளையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், தமிழக காவல் துறையின் தீவிரமான நடவடிக்கைகளை வெளிப்படுத்துகிறது. மேலும் விவரங்கள் விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விசிக நிர்வாகி மீது தாக்குதல்.. இரவோடு இரவாக ஏர்போர்ட் மூர்த்தி அதிரடி கைது..!!