“ஏக்கருக்கு 25 ஆயிரம் செலவு செஞ்சும் எல்லாம் போச்சே”... கண்ணீர் விட்டு கதறும் விவசாயிகள்...!
அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மழைநீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை.
பொன்னேரி அருகே சாலை பணிகளுக்காக அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் காரணமாக மழை நீர் வெளியேற வழியின்றி 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு. தைப்பொங்கலுக்காக பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை. அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மழைநீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் சுமார் 30000க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா பருவ நெற்பயிற் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் பரவலாக கன மழை கொட்டி தீர்த்தது. பொன்னேரி அடுத்த சிறுவாக்கம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேற வழியின்றி 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் தேங்கி கிடப்பதால் பயிர்கள் அழுகி பாழாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காட்டுப்பள்ளி துறைமுகத்தை சித்தூர், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் காரணமாக அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரால் மழைநீர் வெளியேறாமல் வயல்களில் தேங்கி நிற்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். தங்களது கிராமத்திற்கு மேல் உள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து படிப்படியாக மழை நீர் தங்களது கிராமம் வழியே வடிந்து சென்று வந்த நிலையில் தற்போது சாலை பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சுற்றுச் சுவரால் மழை நீர் குறுகிய பாதையில் செல்வதால் வயலிலேயே தேங்கி விட்டதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பல கோடியில் சமாதி கட்டுறீங்க... நெல் சேமிப்பு கிடங்கு கட்ட முடியலையா? திமுக அரசை சாடிய சீமான்...!
மழையின் போது சாலை பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியம் காட்டியதாகவும் விவசாயிகளே சென்று மழைநீர் வடிகாலை சீர்படுத்தி தண்ணீரை சற்று வெளியேற்றியதாகவும் தெரிவித்தனர். தைப்பொங்கல் அறுவடைக்காக கடந்த 15 நாட்களுக்கு முன் நாற்றங்கால் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் தற்போது மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டு சாகுபடி செய்து வருவதாகவும், தற்போது நாற்றங்கால் முழுவதும் வயலில் தேங்கியுள்ள தண்ணீரில் மூழ்கி அழுகியதால் தண்ணீர் வடிந்த பின்பு நெற்பயிர் மீண்டும் முளைத்து வராது என தெரிவித்தனர். அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், சாலைப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரை மாற்றி அமைத்து மழைநீர் வயலில் இருந்து வடிந்து செல்லும் வகையில் வடிகால் வசதியை முறைப்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறும் விவசாயிகள்... கையாலாகாத அரசு...! விளாசிய இபிஎஸ்...!