கனிம வளக் கொள்ளை: பிப்ரவரி 7-ல் கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை விவசாயிகள் பேரணி!
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி பேரணி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனிம வளங்கள் சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள விவசாய சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பேரணியைத் தொடங்க உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, விவசாயிகள் சங்க மூத்த தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் அய்யாக்கண்ணு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தமிழக அரசு மற்றும் மத்திய அரசைச் சாடிப் பேசிய அவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படாவிட்டால் வரும் தேர்தலில் அதன் எதிரொலி இருக்கும் எனத் தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பி.ஆர். பாண்டியன், "தமிழகத்தில் கனிம வளங்கள் மிக மோசமான முறையில் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அல்லது உரிய விளக்கம் அளிக்க வேண்டும். திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். குறிப்பாக, விளைபயிர்களுக்கு ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டு வருதல், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தல் மற்றும் இலவச மின்சாரத்திற்கு வேட்டு வைக்கும் ஒழுங்குமுறை ஆணையத்தை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: "வாக்குறுதி என்னாச்சு? திமுக-வுக்கு பி.ஆர். பாண்டியன் கேள்வி!" பிப்ரவரியில் டெல்டா விவசாயிகள் போராட்டம்!
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான ‘அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்’ பிரம்மாண்டப் பேரணி புறப்பட உள்ளது. இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவிலில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். தேர்தல் நெருங்கும் வேளையில் விவசாயிகளின் இந்தப் போராட்டம் தமிழக அரசியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் அணிக்கு அடுத்த அதிர்ச்சி..! இன்று திமுகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்?