×
 

கோதாவரி - காவிரி இணைப்பை விரைவுபடுத்துக! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்!

கோதாவரி காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ச ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தென்னிந்திய மாநிலங்களின் நீண்டகால நீர்ப் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், 'கோதாவரி - காவிரி - குண்டாறு' நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட மத்திய ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கு (NWDA) உடனடியாக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் மேற்பரப்பு நீர் வளம் பெருமளவில் பற்றாக்குறையாக உள்ளதையும், மாநிலத்தின் நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். நிலத்தடி நீர் மட்டமும் கவலைக்கிடமான முறையில் உறிஞ்சப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் விவசாயப் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டமே மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாகத் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய பகுதிகள் தொடர்ச்சியாகக் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கோதாவரி - காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் அவசியமானது என்றும், இத்திட்டத்தின் மூலம் மழைக்கால வெள்ள உபரிநீரை நீர்ப்பற்றாக்குறை உள்ள வறட்சிப் பகுதிகளுக்குத் திருப்பிவிட முடியும் என்றும் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜப்பான் ஓபனில் பி.வி.சிந்து வரலாற்று சாதனை! சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தற்போது தேசிய நீர் மேம்பாட்டு முகமை தயாரித்துள்ள முதற்கட்ட விரிவான திட்ட அறிக்கையில், சீரமைப்பு வழியானது காவிரி ஆற்றிற்குச் சில கிலோமீட்டர் முன்னதாகவே முடிவடைகிறது. எனவே, அதற்குப் பதிலாகக் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளைக் கதவணை வரை இந்த இணைப்பை நீட்டித்து, முன்னுரிமை அடிப்படையில் திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு கோரியுள்ளது.

மாநிலங்களுக்கிடையேயான உடன்பாடு: பயன்பெறும் மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகியவற்றுடன் கலந்தாலோசனைகளை விரைவுபடுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளில் விரைவாக உடன்பாடு ஏற்படுத்த வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கட்டளைக் கதவணை வரை நதி இணைப்பை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை உடனடியாக இறுதி செய்ய வேண்டும்.

இத்திட்டத்தின் சமூகப் பொருளாதார நன்மைகளைக் கருத்தில் கொண்டு, இதைக் 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக' அறிவித்து, விரைவுப் பாதையில் செயல்படுத்த வேண்டும்.

திட்டத்தை ஒருங்கிணைத்து, உத்திரவாதமான நிதியுதவியுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்காக மத்தியஅரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்களின் பங்கேற்புடன் 'சிறப்பு நோக்கு அமைப்பை' உருவாக்க வேண்டும்.

கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைக் களைந்து இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்பதில் தாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தத் தேவைப்படும் அனைத்து முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: அமித்ஷா காணவில்லை! நாடாளுமன்றத்தில் 'Missing' பதாகையுடன் மஹூவா மொய்த்ரா எம்பி போராட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share