×
 
☰

அடக்கொடுமையே...!! - 10ம் வகுப்பு மாணவியை தூக்கத்திலேயே கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை... பகீர் காரணம்...!

காதலைக் கைவிட மறுத்த 10ஆம் வகுப்பு மாணவி கொலை – கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை கைது

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வி. பரங்கினி கிராமத்தில், காதலைக் கைவிட மறுத்த 10ஆம் வகுப்பு மாணவியை அவரது தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தையைப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வி. பரங்கினி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசாஸ்திரி. லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் 16 வயதுடைய மூத்த மகளும், 14 வயதுடைய இளைய மகளும் உள்ளனர். இளைய மகளான விகாஷினி, ராணிப்பேட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவருடன் அவருக்குக் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, ராணிப்பேட்டையில் தங்கிப் படிப்பது சரியாக இருக்காது எனக் கருதிய குடும்பத்தினர், விகாஷினியை மீண்டும் சொந்த ஊரான வி. பரங்கினிக்கு அழைத்து வந்துள்ளனர். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அவர் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: சாத்தான்குளத்தில் அதிர்ச்சி.! ரெஜிலாவின் கணவரும் பலி.!! இரட்டை கொலை வழக்காக மாற்றி உத்தரவு..!

இதற்கிடையே, படிக்கும் வயதில் காதல் வேண்டாம் என்றும், முதலில் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் பெற்றோர் விகாஷினிக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால், பெற்றோரின் அறிவுரையை ஏற்காமல், தொடர்ந்து செல்போனில் காதலனுடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரைத் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு மாணவியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், விகாஷினி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது தந்தை சிவசாஸ்திரி, மாணவியின் செல்போனை எடுத்துப் பார்த்தபோது, அவர் தொடர்ந்து காதலனுடன் பேசி வந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவசாஸ்திரி, தனது மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் வீட்டிற்கு வந்து மாணவியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவம் குறித்து வானூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், மாணவியின் தந்தை சிவசாஸ்திரியைக் கைது செய்தனர். மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வானூர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பட்டப் பகலில் ரவுடி படுகொலை.! போலீஸ் ஸ்டேஷன் சென்றவரை தீர்த்து கட்டிய கும்பல்..! தலைநகரை கலங்கடிக்கும் சம்பவம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share