மீன்பிடிமுறை பிரச்சனை தீர்த்து இருந்தா இதெல்லாம் நடக்குமா? மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு செல்வப் பெருந்தகை கண்டனம்...!
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது என்றும் இதனால் மீனவ கிராமங்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது., இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் எந்த முடிவும் எட்டவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை கடிதம் எழுதியும், நேரில் சென்று கோரிக்கை வைத்தும் உறுதியான, நிலையான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: செவிலியர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்... அரசு செவி சாய்க்கணும்... செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்...!
மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நிகழ்ந்து இருக்காது என்றும் மீன்பிடி முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா-இலங்கை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று கூறிய செல்வப் பெருந்தகை, இல்லையென்றால் பாஜக ஆட்சிக்கு எதிராக மீனவர்களைத் திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி… தமிழ்நாட்டுக்கு முன்னோட்டம்… செல்வப் பெருந்தகை பெருமிதம்…!