நடுக்கடலில் சட்டவிரோத நடவடிக்கை.. நாதக வேட்பாளரை வலை வீசி தேடும் மீன்வளத்துறை- நடந்தது என்ன?
பூம்புகார் கடலுக்குள் 8 நாட்டிக்கல் மைல் சென்ற வேட்பாளர் மீனவர்களிடம் வாக்கு வேட்டை’ அனுமதியின்றி சென்றதால் மீன்வளத்துறையினர் விசாரணை
தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்க ஒவ்வொரு வேட்பாளரும் தீவிர வாக்கு வேட்டையில் இறங்கிவிட்டனர். வாக்காளர்கள் வேலை செய்யும் இடத்திற்கே சென்று அவர்கள் செய்யும் தொழிலையே வேட்பாளர்களும் செய்துகாட்டி வித்தியாசமான முறையில் ஓட்டு கேட்டு அசத்திவருகின்றனர்.
இந்த தேர்தலில் பலர் நூதன முறையில் வாக்குசேகரித்து வருவதை தொலைக்காட்சியில் கண்டு ஆர்வமான நாம் தமிழர் கட்சியின் பூம்புகார் தொகுதி வேட்பாளர் மீனவர் இளையநகுலன், திடீரென்று 10க்கும்மேற்பட்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களுடன், மீன்பிடி படகு ஒன்றை எடுத்துக் கொண்டு பூம்புகார் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கிளம்பி 8 நாட்டிக்கல்மைல் கடலுக்குள் சென்றார்.
அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட மீனவர்களிடம் தனக்கு வாக்கு கேட்டார். மீனவராகிய எனக்கு சீமான் சீட் கொடுத்துள்ளார். விவசாயி சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டார். மீனவ சமுதாயத்தை சேர்ந்த 5 நபர்களுக்கு தேர்தலில் நிற்க சீமான் சீட் கொடுத்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் கூட மீனவர் இல்லை, மீனவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் செந்தமிழன் சீமானாகும். ஆகவே சீமானின் தம்பியான எனக்கு வாக்களியுங்கள் என்றார்.
இதையும் படிங்க: ஆர்.கே. நகர் பரப்புரையில் தேர்தல் விதிமீறல்..! சீமான் மீது பாய்ந்த வழக்கு..!
அதன்பிறகு தமது பரிவாரங்களுடன் துறைமுகம் திரும்பியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத்துறையினர் மீன் பிடித்தொழிலைத் தவிர கடலுக்குள் செல்லக்கூடாது என்ற விதியுள்ளது. மீன்வளத்துறையினருக்கு டிமிக்கிக் கொடுத்துவிட்டு பூம்புகார் கடலுக்குள் 8 நாட்டிக்கல் மைல் சென்று அங்கே மீனவர்களிடம் வாக்கு சேகரித்தது சட்டப்படி தவறு என்பதால் மீன்வளத்துறையினரின்அனுமதியின்றி கடலில் சென்றவர்கள், மேலும் அவர்கள் உபயோகப்படுத்திய படகு போன்றவற்றை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டமன்ற தேர்தல்..! பணப்பட்டுவாடா.. அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்த நாதகவினர்..!!