×
 

அடேங்கப்பா.. இம்புட்டா..!! விலையை கேட்டு தொண்டையில் சிக்கிய மீன் முள்ளு..!! ஆடிப்போன 'மீன்' பிரியர்கள்..!!

சென்னை காசிமேடு உள்ளிட்ட சந்தைகளில் மீன்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

தமிழக கடற்கரையில் மீன் இனப்பெருக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் 61 நாள் மீன்பிடி தடைக்காலம், இந்தாண்டு ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14 வரை நடைமுறையில் உள்ளது. இந்தத் தடை காரணமாக விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் செல்ல முடியாத நிலையில், மீன் வரத்து குறைந்து சென்னை உள்ளிட்ட நகரங்களில் மீன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிற்கும் காட்சி இப்போது வழக்கமாகிவிட்டது. பைபர் படகுகள் மூலம் வரும் சொற்ப அளவு மீன்களுக்கே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் வஞ்சிரம் மீன் கிலோவுக்கு 1,000 முதல் 1,500 ரூபாய் வரை, சங்கரா 600 முதல் 800 ரூபாய், நெத்திலி மற்றும் இறால் 500 முதல் 850 ரூபாய் வரை விற்பனையாகின்றன. சாமானிய மக்களின் சமையலறைக்கு இது பெரும் சுமையாக அமைந்துள்ளது.

அசைவப் பிரியர்கள் விரும்பும் வஞ்சிரம், இறால் போன்றவை கட்டுப்படியாகாத விலைக்குச் சென்றதால், பலரும் மீன் வாங்குவதைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம், தமிழகத்தில் சுமார் 10 லட்சம் மீனவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் கரையோரமாக முடங்கிக் கிடக்கின்றன.

இதையும் படிங்க: FRIENDS APP மூலம் பழகிய நபரிடம் நகை, பணம் பறிப்பு..! பெண் உட்பட 4 பேர் கைது..!

நாகை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,000 படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. தஞ்சையில் 150, புதுக்கோட்டையில் 350, மயிலாடுதுறையில் 250, காரைக்காலில் 200 என டெல்டா பகுதி முழுவதும் படகுகள் நங்கூரமிட்ட நிலையில் உள்ளன. இதனால் சுமார் 1.50 லட்சம் மீனவர்களும், 10 லட்சம் தொழிலாளர்களும் வேலையிழந்து தவிக்கின்றனர். நாளொன்றுக்கு சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு, பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, அடிக்கடி வானிலை எச்சரிக்கை ஆகியவற்றால் ஏற்கெனவே மீன் வளம் குறைந்துவிட்ட நிலையில், இந்தத் தடைக்காலம் மீனவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காலத்தைப் பயன்படுத்தி மீனவர்கள் தங்கள் படகுகளைப் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வர்ணம் பூசுதல், துருப்பிடித்த பகுதிகளைச் சீரமைத்தல், இன்ஜின் பழுதுபார்த்தல், கிழிந்த வலைகளைப் பின்னுதல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், ஒரு படகை முழுமையாகப் பராமரிக்க 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், வருமானம் இல்லாத மீனவர்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். லட்சக்கணக்கில் கடன் வாங்கி படகுகளைச் சீரமைப்பது சிரமமான காரியம் என்கின்றனர்.

மீனவர்களின் முக்கிய கோரிக்கைகள்: வங்கிகளிடமிருந்து எளிய முறையில் கடன் உதவி வழங்க வேண்டும், டீசல் மீதான ஜிஎஸ்டியை வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை 8,000 ரூபாயிலிருந்து மேலும் உயர்த்த வேண்டும். விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு இந்த உதவியை அதிகரிக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

மீன்பிடித் தடைக்காலம் முடியும் வரை இந்த நெருக்கடி தொடரும் என்பதால், மீனவர்களின் குடும்பங்களைப் பாதுகாக்க அரசு கூடுதல் நிவாரண நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டியது அவசியம். ஒருபுறம் மீன் வளத்தைப் பாதுகாக்கும் இந்தத் தடை, மறுபுறம் மீனவர்கள் மற்றும் நுகர்வோரின் வாழ்க்கையைப் பாதிக்கும் இரட்டைச் சவாலாகத் தொடர்கிறது.

இதையும் படிங்க: அதிகாலையிலேயே பயங்கரம்... மீண்டும் மீண்டும் நிலநடுக்கும்.. கதிகலங்கி நிற்கும் மக்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share