×
 

மூச்சு உள்ளவரை இதை செய்யமாட்டேன்... தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ பரபரப்பு வீடியோ!!

தேமுதிகவிலிருந்து விலகுவதாக ஒருபோதும் தான் கூறவில்லை என்று அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வெள்ளிச்சந்தையில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்  நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தொடர்கிறார். தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராக விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அணிந்திருந்த மோதிரத்தை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய பிரபாகருக்கு அணிவித்தார். இதையடுத்து, இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான், உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், இல்லாவிட்டால், தானே பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்வேன் என்று பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு நல்லதம்பி கடிதம் எழுதியிருந்தார்.

இதையும் படிங்க: கேப்டன் மகனுக்கு பதவி... தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. எடுத்த அதிரடி முடிவு!

இந்த கடிதத்தைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்தே விலகுவதாகத் தகவல்கள் பரவிய நிலையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேமுதிகவிலிருந்து விலகுவதாக ஒருபோதும் கூறவில்லை என்று தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் அளித்த கடிதத்தில், பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்டேன். விடுவிக்காதபட்சத்தில் நான் ஒதுங்கிக்கொள்வேன் என்றுதான் சொன்னேன்.

இது ஊடகங்களில் தவறாக பரப்பப்பட்டு, நான் கட்சியிலிருந்தே விலகுவதாகச் சொன்னார்கள். ஒரு காலமும் நான் என்னை அறிமுகப்படுத்திய விஜயகாந்த் கட்சியிலேயே தொடர்ந்து பயணிப்பேன். உயிர் மூச்சு உள்ளவரை அவரது தொண்டனாகவே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக பொதுச்செயலாளர் பிரேமலாத விஜயகாந்துக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன்.. தமிழகத்தில் பிரிக்க முடியாதது வாரிசு அரசியலும் இளைஞரணி பதவியும்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share